சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
294. | சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (6) |
294. சேவிக்க-வணங்குதற்கு, ‘‘வந்து’’ என்றதை, ‘‘மால்’’ என்பதன் பின்னர்க் கூட்டுக. ‘திசைதிசையன எங்கும்’ என மாற்றுக. ‘‘திசை திசை’’ என்னும் அடுக்குப் பன்மை குறித்து நின்றது. ‘‘திசையன’ என்றதற்கு. திசைகளாகிய இடங்களில்’ என இரைக்க. கூவி-அழைத்து. ‘‘கவர்ந்து’’ என்றதற்கு. ‘வழிபாட்டுப் பொருள்களைக் கைக்கொண்டு’ என உரைக்க. ‘‘ஆடும் அமுது’’ என்றதில் உள்ள ‘‘அமுது’’ என்பது, ‘அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான்’ என்பதில் ‘பார்ப்பான்’ என்பதுபோலக் கோடற் பொருட் பெயராய் நின்றது. உடல்நலம் ஒன்றே பயக்கும் தேவரமுதினும் வேறாதலை விளக்க, ‘‘ஆவிக்கு அமுது’’ என்றார். இதுவும், இல்பொருள் உவமை. அமுது-அமிர்தம் போல்பவன். என் ஆர்வத் தனம்-எனது அவாவிற்குரிய பொருள் (செல்வம்). ஒப்பு அமரர்-பிறப்புவகையால் ஒரு நிகராய தேவர். அஃதாவது ‘வானவர்’ என்றபடி. பாவிக்கும் பாவகம்-நினையும் நினைவு. அவர் தம் நினைவிற்கு அகப்படாமையின், ‘‘அப்புறத்தான்’’ என்றார். |