சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


52.

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
   கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
   மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
   நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
   வருந்திநான் மறப்பனோ இனியே.               (7)
 

52. ‘கங்கையது    நீர்போலும்  நீரையுடைய   அரிசில்’   என்க.
‘‘கங்கை    நீர்’’     உவமையாகு      பெயர்.     அரிசில்,   ஓர்

யாறு.    அரிசிலின் கரைக்கண் உள்ளதும்,  இருமருங்கும் பொழிலால்
சூழப்பட்டதும்,  கழனிகளை யுடையதும், நீண்ட  மாளிகை சூழ்ந்ததும்,
மாடங்கள்   நீடியதுமான  உயர்திருவீழி’  என்க.  ‘மாளிகை  மாடம்’
என்பன  இல்லத்தின்  வகைகள்.  ‘தங்கு,  சீர்,  செல்வம்,  தெய்வம்,
தான்தோன்றி’    ஆகிய    அனைத்தும்,    ‘‘நம்பி’’   என்பதையே
விசேடித்தன. சோதி-ஒளி. ‘தனது ஒளியாகிய மங்கை’ என்க. ‘‘வருந்தி
மறப்பனோ’  என்றதை, ‘மறந்து வருந்துவனோ’ எனப் பின்முன்னாக்கி
யுரைக்க. ‘வருந்த’ எனப் பாடம் ஓதுதலும் ஆம்.  


மேல்