சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


95.

பவளமே மகுடம் ; பவளமே திருவாய்;
   பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம்; தவளமே புரிநூல்;
   தவளமே முறுவல்; ஆ டரவந்
துவளுமே; கலையும் துகிலுமே யொருபால்;
   துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே; ஆகில், அவரிடங் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (5)
 

95.     ‘முடியும்,  வாயும்,  மேனியும்  செந்நிற     முடையன  ;
திருமேனிமேற்     பூச்சும்,     முப்புரி    நூலும்,     புன்னகையும்
வெண்ணிறமுடையன’  என்றவாறு.  தவளம்-வெண்மை.  களபம்-பூசும்
சாந்து    ;    சிவபெருமான்   பூசிக்கொள்ளும்   சாந்து   திருநீறே.
துவளும்-நெளியும்.  ‘‘கலை’’ எனப் பொதுப்படக் கூறியது ‘தோலாடை’
என்றற்கு.  துகில்-நல்லாடை. ‘‘ஒருபால்’ என்றாராயினும், ‘ஓரொருபால்’
என்பது கருத்தென்க. ஒருத்தி-ஒப்பற்றவள். இடமருங்கில்  துடிபோலும்
இடையை   உடைய   ஒப்பற்றவளாகிய  அவளும்  இருப்பாள்’  என
உரைக்க.  


மேல்