சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


115.கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
   கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே !மணியுமிழ்ந் தொளிரும்
   பரமனே !பன்னகா பரணா !
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
   மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
   நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே.    (4)
 

115.  நூல் கெழுமியும்-நூல்களோடு பழகியும், நீர்க்கிடை  அன்னார்
உடைய   என்   நெஞ்சு-நீரிற்கிடக்கும்  சடைப்  பூண்டுபோல்பவரது
உள்ளங்கள் போலும் எனது உள்ளம். கிடை-சடைப் பூண்டு ;  இதனை,
‘தக்கை’  என்றும்,  ‘நெட்டி’ என்றும் வழங்குவர். இது நீரிலே நீங்காது
கிடந்தும்  நீரை  உள்ளே  ஏற்பதில்லை.  அதனால்,  இது  நூலொடு
பழகியும்   அதன்   பொருளை   ஏலாது   நிற்பவரது  உள்ளங்கட்கு
உவமையாயிற்று. ‘‘உடைய’’ என்றது, குறிப்பு வினைப் பெயர்.‘‘நெஞ்சு’’
எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ‘‘உடைய’’ என்றார். உடைய
நெஞ்சு,  உவமத்தொகை.  பாடு  இலா.  அழிதல் இல்லாத. ‘‘ஒளிரும்’’
என்ற   பெயரெச்சம்,  ‘‘பரமன்’’  என்னும்  இடப்பெயர்  கொண்டது.
‘‘பன்னகாபரணன்’’   எனப்   பின்னர்க்   கூறுகின்றமை  ‘மணிகளை
உமிழ்வன  அவையே’  என்பது விளக்கிற்று. ‘‘உமிழ்ந்து’’ என்றதனை,
‘உமிழ’  எனத்  திரிக்க.  இவ்வாறன்றி, ‘‘பரமனே’’ என்பதனை, ‘மணி
உமிழ்ந்து’’   என்றதற்கு   முன்னே  கூட்டுதலும்  ஆம். மேடெலாம்
செந்நெல்  விளைதல்,  மிக்க  நீரினாலாம். ‘‘உள் புகுந்து’’ என்றதற்கு,
‘என்  உயிரின்  உள்ளிடத்திற்  புகுந்து’ என உரைக்க. ‘‘இது வியப்பு’’
என்பது, குறிப்பெச்சம்.


மேல்