சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


139.

மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த
   முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டங் குருகிஒன் றாய
   தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே ;
   நிசிசரர் இருவரோ டொருவர்
காதலிற் பட்ட கருணையாய் ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (7)
 

139.     அலைப் பட்ட-அலையோடு கூடிய. ‘உதித்த அமுது’ என
இயையும்.  முழுமணி-குற்றமற்ற முத்து. ‘மணித்திரள் போலும்  அமுது’
என்க.  இது, நிறம்பற்றி வந்த உவமை. ஆங்கே-அவ்விடத்தே. ‘‘தாய்’’
என்றது,  அக்கடலை. ‘தலைப்பட்டவழி’ என்பது, ‘தலைப்பட்டு’  எனத்
திரிந்து    நின்றது.    தலைப்படுதல்-சேர்தல்.   அங்கு-அப்பொழுது,
தன்மையில்-தன்மைபோல.   இறைவனே   உயிர்கட்கு    அம்மையும்
அப்பனும் ஆதலின், ‘என்னை முன் ஈன்ற நீ’’ என்றார். ‘‘முன் ஈன்ற’’
என்றது,  பான்மைச்  சொல்.  ‘வகையினேன்’  என்பதனை,  ‘‘வகை’’
என்றார்.  ‘ஆவேன்’  என்னும்  ஆக்கம்  தொக்கு  நின்றது. ‘உருகி
ஒன்றாய்  விடுவேன்’  என்றார்.  இஃது இறைவனை மீளவும் எதிர்வர
வேண்டியவாறு.     வாதவூரடிகளும்     இவ்வாறு    வேண்டினமை
வெளிப்படை.   நிசிசரர்-அசுரர்.   இருவரோடு  ஒருவர்-மூவர். இவர்
திரிபுரம்  அழித்த  காலத்துத்  தமது  சிவபத்தியால் அழியாது நின்று
சிவபிரானை  அடைந்தவர். அவர்களது பத்தி காரணமாகச் சிவபிரான்
அவர்களைத்   தப்பு   வித்தமை   பற்றி,  ‘அவர்தம்  காதலிற்பட்ட
கருணையாய்’ என்றார். பட்ட-அகப்பட்ட, ‘‘பத்தி வலையிற் படுவோன்
காண்க’’ (திருவாசகம்-திருவண்-42,) என்று அருளியது காண்க.


மேல்