18. பொரு புயம், வரைப் புயம்’ எனத் தனித்தனி இயைக்க. புயமாவது வீரவளை யணியும் இடமாகலின், புயத்தின் மீமிசையாவது சுவல் அல்லது பிடர். புலித்தோல், உடையாதலேயன்றி உத்தரியமும் ஆம் என்க. அகலம்-மார்பு. ‘‘உடன்’’ என்றது, எண்ணொடுவின் பொருட்டு. ‘புலித்தோலும், அகலமும், தோளும் காணப்பெற்றவர் வாழும் பெரும்பற்றப் புலியூர்’ என்க. இவற்றைக் காணும் தமது அவாவை, ‘‘காணப்பெற்றார்’’ எனப் பிறர்மேல் வைத்து விளக்கினார். எனவே, இதனுள் இறுதிக்கண் தாழ்வடத்தையே கூறினாரெனினும், இவை அனைத்தையும் தொகுத்துக் கூறுதல் கருத்தாகக் கொள்க. இவை, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும். பிறர் என்றது, சிறப்பாகத் தில்லைவாழ் அந்தணர்களை, ‘திருமருவுதரத்தார்’ என்பது, திருமருவுதரத்தார்’ என வகையுளியாயிற்று. திரு- அருள், தரத்தார்-மேன்மையுடையவர். ‘‘திசை அடைப்ப’’ என்றது. ‘சுற்றிலும் நெருங்கி நின்று காண’ என்றவாறு. ‘‘திசைமிடைப்ப’’ என்றதும் பாடம். உரு-அழகு, உதரம்-வயிறு. தனிவடம்-ஒப்பற்ற தாழ்வடம். |