6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
212. | வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாம்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யிற் கூடாமே கைவந்து குறுகுமா றியானுன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (8) |
212. ‘‘வாடா’’ என்பது, ‘செய்யா’ என்னும் வினையெச்சம். ‘வாடி,பிதற்றி, நினைந்து, உருகிச் செய் குற்றேவல், என்க. வாய் நா-வாயின்கண் உள் நாவால் ‘செய் வீடாம் குற்றேவல்’ என மாறுக. வீட்டிற்கு ஏதுவாவதனை, ‘‘வீடாம்’’ என்றார். குற்றேவல்-சிறு பணிவிடை. எற்று-என்ன பயனை உடையது. ‘உன்னை அடைவதையே பயனாக உடையது’ என்பது குறிப்பு. இதனால், இவர் உலகப் பயன் கருதி இறைவனுக்குத் தொண்டு செய்யாமை பெறப்பட்டது. இது பொய்யிற்கூடாமே-இக் குற்றேவல் பொய்யின்கண் பொருந்தாதவாறு; ‘பழுதாகாதபடி’ என்றவாறு. ‘கூடாமே நாடாய்’ என இயையும். ‘‘கைவந்து’’ என்றதில் கை, இடைச்சொல். ‘யான் வந்து உன்னைக் குறுகுமாறு நாடாய்’ என மாற்றிக் கூட்டுக‘ நாடாய்-நினைந்தருள். |