7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
236. | அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் ! கயிலை மலையாய் ! காண அருள்என்று பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய்மதிலின் றில்லைக் கருளித் தேவன் ஆடுமே. (1) |
236. முதலடியில் உள்ள, ‘ஆய்’ என்பன பலவும் வினையெச்சங்கள். ‘இரவு முதலிய பல பொருள்களாகி’ என்பது அவற்றின் பொருள். இவ்வெச்சங்கள் பலவும் அடுக்கிநின்று, ‘‘நிழலாய்’’ என்ற விளியேற்ற குறிப்புவினைப் பெயரைக் கொண்டு முடிந்தன. அல்-இரவு. ‘‘அரு, உரு’’ என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. ‘‘அமுதம்’’ என்றதும், தேவர் அமுதத்தையே குறித்தது. கல்லால் நிழலாய்-கல்லால மரநிழலில் எழுந்தருளி யிருப்பவனே. ‘‘கயிலை மலையாய்’’ என்றதும் விளிப்பெயரே. காண-(உனது நடனத்தை) யாங்கள் காணுமாறு. ‘‘பதஞ்சலிகள்’’ என்றது. ‘பதஞ்சலி முனிவர்போன்ற முனிவர்கள்’ என்றவாறு. பரவ-துதிக்க. பதஞ்சலியார் முதலிய முனிவர் பலரது துதிகளுக்கு இரங்கியே இறைவன் தில்லையில் வெளிப்பட்டு நின்று தனது நடனத்தைக் காட்டியருளினான்’ என்பது தில்லைக் கூத்தப் பெருமானைப் பற்றிய வரலாறு. செல் வாய்-மேகங்கள் பொருந்திய. சாரியையின்றி’ மதிற்றில்லை’ என ஓதப்படுவது பாடம் அன்று. |