7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
248. | காண்பதி யானென்றுகொல் கதிர் மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென் றறி தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறை யோன்மலர்ப் பாதங்களே. (2) |
248. ‘‘மணி, கனல்’’ என்றவை உவமை ஆகுபெயர்கள். ‘‘ஆண், பெண், அரு, உரு’’ என்ற நான்கும், ‘‘என்று’’ என்பதனோடு தனித்தனி இயைந்தன. அரிது-அரிது பொருள். ‘‘சேண் பணை மாளிகை’’ என்றதை, ‘சேணிற் பணைத்த மாளிகை’ எனப் பிரிக்க. ‘வானத்தை அளாவிப் பரந்த மாளிகை’ என்பது பொருள். ‘சிற்றம்பலத்துக்கண்’ என உருபு விரிக்க. ‘நடம்செய் பாதங்கள்’ என இயையும். ‘‘பாதங்கள்’’ என்புழியும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து, ‘யான் காண்பது என்று கொல்’ என்பதனைக் கொண்டு கூட்டி, ‘இறைவனையும், அவன் பாதங்களையும் யான் காண்பது என்றோ’ என உரைக்க. பாதங்களை வேறாக எடுத்துக் கூறியது. அவற்றது சிறப்புப்பற்றி,‘‘நின்னிற் சிறந்த நின்தாள் இணை’’ (பரிபாடல்-4) எனச் சான்றோரும் கூறுவர். |