8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
266. | அருள் பெறின் அகலிடத் திருக்க லாமென் றமரர்கள் தலைவனும் அயனும் மாலும் இருவரும் அறிவுடை யாரின் மிக்கார் ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை மருள்படு மழலைமென் மொழியு மையாள் கணவனை வல்வினை யாட்டி யேன்நான் அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா ! ஆசையை அளவறுத் தார்இங் காரே. (10) |
266, ‘‘மிக்கார்’’ என்றது, ‘மிக்காராய்’ என முற்றெச்சம். ஏத்துதலால், அறிவுடையாரின் மிக்காராயினர். ‘‘மிக்கார்’’ என்றதனைப் பெயராக்கி, அமரர்தம் தலைவன் முதலியோருக்கு ஆக்கி உரைப்பாரும் உளர். ‘‘கூத்து’’ என்றது. ‘கூத்தனை’ என ஆகுபெயராய் நின்றது. மருள்படு - இறைவற்கு மையல் உண்டாதற்கு ஏதுவான. வினையாட்டியேன் -வினையை உடையளாகியேன். ‘நான் அருள் பெறுதலைக்கருதி என் நெஞ்சம் அலமரும்’ என்க. ‘‘ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்’’ என்றது வேற்றுப்பொருள் வைப்பு. ‘எங்கள் கூத்தனை, உமையாள் கணவனை அமரர்கள் தலைவன் முதலாயினோர் (அவன் அருள் பெறமாட்டாது) ஏத்துகின்றாராக, வல்வினை யாட்டியேனாகிய நான் பெற நெஞ்சம் அலமரும் ; ஆதலின், ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்’ எனக் கூட்டி முடிக்க. ஆவா, வியப்புக் குறிப்பு. |