சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
298. | தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும்அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (10) |
298. ‘தாதையை வீசிய’ என இயையும். சண்டி-சண்டேசுர நாயனார். இவர், தந்தைதன் காலை வெட்டிப் பேறு பெற்ற வரலாறு பெரியபுராணத்துட் பரக்கக் காணப்படுவது. அண்டம்- வானுலகம். என்றது, அதன்கண் உள்ளாரை. |
‘‘அவ்வண்டம்’’ என்ற பண்டறி சுட்டு வானுலகத்தின் பெருமையுணர நின்றது. ‘இவ்வண்டம்’ என்பது பாடம் அன்று. ஒடு, எண்ணொடு, உம்மை, சிறப்பு. ‘அண்டத்தொடும் பூதலத்தோரும் உடன் வணங்க’ என மாறிக்கூட்டுக. ‘‘உடனே என்ற ஏகாரம் அசைநிலை. பொன்-அழகு. போனகம்-தான் உண்டு எஞ்சிய உணவு. சோதி மணி முடி-ஒளியை உடைய அழகிய சடைமுடி. தாமம்-கொன்றை மாலை. நாமம்-‘சண்டன்’ என்னும் சிறப்புப் பெயர். இஃது அப்பதவி பற்றி வருவது. எனவே, ‘‘நாமம்’’ என்றது. ‘அப்பதவியை’ என்றதாயிற்று. நாயகம்-தலைமை. ‘‘தொண்டர்க்கு நாயகமும்’’ என்றது, அப்பதவியது இயல்பு விளக்கியவாறு. ‘சிவபிரானை வழிபடும் அடியவர்க்கு அவர்தம் வழிபாட்டின் பயனை வழங்கும் பதவியே சண்டேசுர பதவி என்பதும், ‘அப்பதவியையே அப்பெருமான் விசாரசருமருக்கு அளித்தான்’ என்பதும் அறிக. ‘பரிசாக வைத்தான்’ என ஆக்கம் வருவிக்க. ‘‘பாதகத்துக்குப் பரிசு வைத்தான்’’ என்றது. ‘இன்னதொரு பொருந்தாச் செயலைச் செய்தான்’ எனப் பழிப்பதுபோல நின்று, ‘திருத்தொண்டில் உறைத்து நின்றாற்கு அவ்வுறைப்பினை அறிந்து அதற்குத் தக்க சிறப்பினை அளித்தான்’ என்னும் புகழ் புலப்படுத்து நின்றது. ‘‘பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்’’ என்ற திருவாசகத்தோடு (திருத்தோணோக்கம்-7) இதனை ஒப்புநோக்குக. |