சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


6.

நீறணி பவளக் குன்றமே ! நின்ற
   நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே! யோக
   வெள்ளமே !மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
   அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
   தொண்டனேன் இசையுமா றிசையே.             (6)
 

6. ‘‘நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு’’
என்ற  இரண்டும் இல்பொருள் உவமைகள். நின்ற -நிலைபெற்ற. ‘நின்ற
நெருப்பு’   என  இயையும்.  ‘‘நெருப்பு’’  என்றது.   அஞ்ஞானத்தால்
அணுகலாகாமைபற்றி,வேறு     அணி    புவனபோகம்  -  வேறுபட்ட 
நிரையாகிய உலகங்களில் உள்ள   நுகர்ச்சிகள்.  ‘‘யோகம்’’    என்றது.
‘முத்தி’  என்னும் பொருட்டாய், அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது;     எனவே  , இவ்விரண்டாலும்,    இறைவன்    பந்தமும்,
வீடுமாய்   நிற்றலைக்   குறித்தவாறாதல்   அறிக. அற்புதம் - வியப்பு;
புதுமை.  ‘அம்  பொன்னால்  செய்த’   என   மூன்றாவது   விரிக்க;
‘‘தூயசெம் பொன்னினால்-எழுதி மேய்ந்த    சிற்றம்பலம்’’    என்று
அப்பரும்   அருளிச்செய்தார். இசைதல்-கூடுதல்.  


மேல்