சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


109. 
  

யாதுநீ நினைவ தெவரையா முடைய
   தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
   பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
   கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனம்புகுந் தானே.               (9)
 

109.  ‘யாது  நீ  நினைவது  எவரை  யாம்  உடையது’  என்பதை
இறுதியிற்  கூட்டியுரைக்க.  ‘‘  நீ’’  என்றது,  தோழியை,  ‘நினைவது,
உடையது’  என்பன  தொழிற்பெயரும்  பண்புப்பெயருமாய்   நின்றன
உடையது.  தலைவனாகப்  பெற்றுடையது.  நொதுமலர் வரைவு பற்றித்
தோழி    கூறக்கேட்ட    தலைவி,   இவ்வாறு   கூறினாள்   என்க.
உயர்திணையைக்  குறிக்க,  ‘‘எவர்களை’’  என்றும்,  அஃறிணையைக்
குறிக்க,   ‘‘யாவையும்’’  என்றும்   கூறினாள்.  ‘‘அகலான்’’  என்றது
முற்றெச்சமாய்,  ‘புகுந்தான்’’ என்பதனோடு முடியும் கேதகை-தாழை ;
அதன்  பூவைக்  குறித்தது  ஆகுபெயர்.  குருகு-கொக்கு  ‘குருகென’
என்பதனை’  ‘வெருவு’ என்பதன் முன்னர்க் கூட்டுக. மாதவன்-பெரிய
தவக்கோலத்தை யுடையவன்.


மேல்