சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


118,

விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின்
   வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங்
   கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
   முகத்தலை யகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
   பிழைபொறுத் தாண்டபே ரொளியே.             (7)
 

118.   விரியும் நீர்-கடல். ‘அதன்கண் பிறந்த ஆலம்’ என்க. ஆலக்
கருமை  -விடத்தால்  உண்டாகிய கருநிறம். சாந்து-சந்தனமாகப்  பூசிய
திருநீறு  ‘‘வெண்மையும்’’  எனவேறு எண்ணினாராயினும்,  உவமைக்கு
ஏற்ப,  ‘வெண்மையொடு  கூடிய  செந்நிறத்தொளியும்’  என  ஒன்றாக
உரைத்தல்  கருத்து  என்க. ‘‘ஒளிரும்’’ என்ற பெயரெச்சம்,  ‘‘கழுத்து’’
என்னும் இடப்பெயர் கொண்டது. ‘‘கழுத்தில் ஓர் தனிவடம் கட்டி’’
என்றதனையும்,     முரிதலையும் திருக்களந்தை      ஆதித்தேச்சரப்
பதிகத்துள்ளும்     காண்க.    பேய்களோம்-பேய்போன்றவர்களாகிய
யாங்கள்.     தம்போல்வாரையும்     உளப்படுத்து        இவ்வாறு
அருளிச்செய்தார்.  


மேல்