3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
128. | தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் ; துஞ்சாகண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் ; செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. (7) |
128. ‘தன் மேனி’ என இயையும்.‘‘தன்’’ என்றது, தலைவியை. சோதி, இங்கு அழகு. மேனி-உடம்பு. உடம்பின் கண் தோன்றிய, தபனியப் பூச் சாய் காட்டாய்-பொற்பூப்போலும் நிறமே (பசலையே) தனது வருத்தத்திற்குச் சான்றாய்நிற்க. ‘‘ஆய்’’ என்றதனை, ‘ஆக’எனத் திரிக்க. ‘காட்டா’ என்றே பாடம் ஓதுதலும் ஆம். இவ்வடிக்கும், ‘‘உருக்காட்டாய்’’ எனப் பின்வருகின்ற அதன் பொருளே பொருளாக இறைவற்கு ஏற்றி உரைப்பாரும் உளர். ‘பூஞ்சாய்க் காட்டாய்’ என ஓதுவார் பாடம் பாடம் அன்று, ‘சோதியாகிய எழில்’ என்க. என்றது. அதனையுடைய, உருவத்தைக் குறித்தது. ‘‘இவளுடைய’’ என்பது, ‘‘கண்’’ என்றதனோடும் இயையும். செஞ்சாலி-செந்நெற் பயிர். |