5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
202. | வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல் வளையார் பாடி ஆடும் அணிதில்லை யம்பலத்துள் எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. (8) |
202. தென்னன்-பாண்டியன். ‘இவரால் குறிக்கப்படும் சோழன் காலத்தில் இருந்த பாண்டியன் கொடுங்கோலனாய் இருந்தான்’ என்பதை, ‘வெங்கோல் வேந்தன் ’’ என்றதனால் அறிகின்றோம். ஈழம்-ஈழநாடு; இலங்கை, கோழி-உறையூர். செம்பியன்-சோழன், அணிந்த-வேய்ந்த. ‘அணிந்த அம்பலம்’ என இயையும். ‘‘தூயசெம் பொன்னினால்-எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’’ என அப்பர் அருளிச் செய்தமையால் (திருமுறை-5.2.8.) அவர் காலத்திற்கு முன்பே தில்லைச் சிற்றம்பலம் பொன் வேயப்பட்டுப் பொன்னம்பலமாய் விளங்கினமை நன்கறியப்படும். இவ்வாறு இதனைப் பொன்வேய்ந்தவன் ‘இரணியவன்மச் சக்கரவர்த்தி’ எனவும். ‘இவன் சூரியன் மகனாகிய மனுவின் மகன்’ எனவும் கோயிற் புராணம் கூறும். ‘சோழ மன்னர் மனுவின் வழியினரே’ என்பது மரபு. இம்மரபு பற்றியே பிற்பிற்காலங்களிலும் சோழர் குலத்தில் தோன்றிய மன்னர் சிலர் சிற்றம்பலத்தையும், பேரம்பலத்தையும் பொன்வேயும் திருப்பணியை மேற்கொண்டனர். ‘இங்கு இவ்வாசிரியரால் குறிக்கப்பட்ட சோழமன்னன் ‘முதற் பராந்தகன்‘ எனக் கருதுவர் ஆராய்ச்சியாளர். ‘‘இரணியவன்மன் கௌட தேசத்து அரசன் மகனாயினும் உடற் குற்றத்தால் அரசனாகத் தகுதியற்றவனாய் யாத்திரை செய்து வந்தபொழுது தில்லைப் பெருமானது திருவருளால் அவ்விடத்திலே உடற்குற்றம் நீங்கப் பெற்ற காரணத்தால் வியாக்கிரபாத முனிவர், ‘இவனே இந்நாட்டிற்கு அரசனாவான்; கௌட தேசத்தை இவன் தம்பியர் ஆள்க என்று சொல்லித் தில்லைப் பதியிலே தில்லை மூவாயிரவரும் பிறரும் சூழ அவனுக்கு முடிசூட்டி, புலியூர் அரசனாகிய இவனுக்குப் புலிக்கொடியே உரியது என்று கொடுத்தார்’ என்பதும் அப்புராண வரலாறு. இதனால் பிற்காலச்சோழர்கள் தில்லையில் தில்லைவாழந்தணர் முடிசூட்டப்பெறும் வழக்கத்தையும் உடையராய் இருந்தனர். இவ்வாசிரியரும் அம்மன்னருள் ஒருவராதல் இங்கு நினைக்கத்தக்கது. |