7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
231. | தேய்ந்து மெய்வெளுத் தகம்வனைந் தரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத் தரன்ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை யுடையேற்கே. (6) |
231. ‘‘மெய்’’ என்றது தாப்பிசையாய், ‘தேய்ந்து’ என்பதனோடும் இயையும். அகம் வனைந்து-உள்வளைந்து. இது சிலேடையாய், ‘மனம் மடிந்து’ எனப் பொருள் தந்தது; சிவபெருமானது முடியில் உள்ள நிலவின் இயற்கையை, அங்குள்ள அரவிற்கு அஞ்சிய அச்சத்தால் விளைந்தனவாகக் கூறியது தற்குறிப்பேற்றம். காய்ந்து-சினந்து. வலிசெய்து-வலிதில் தொடர்ந்து. கதிர் நிலா-ஒளியை யுடைய சந்திரன். ‘‘கதிர் நிலா’’ என்றது. ‘தனது கதிரால் எரிதூவும்’ என்றற்கு. ‘அரன் பாதங்கள்’ என இயையும். உடையேற்கு என்றதை, ‘உடையேன்மேல்’ எனத் திரிக்க. ‘கதிர்நிலாத் தான் அரவினை அஞ்சி மெய் தேய்ந்து வெளுத்து அகம் வளைந்து இருந்தேயும் காய்ந்து வலிசெய்து உடையேன்மேல் எரிதூவும் ‘என மாறிக் கூட்டுக. |