சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
292. | சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர், சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (4) |
292.‘‘சொல்’’ என்றது, தலைமை பற்றி மெய்ம் மொழிமேல் நின்றது. ‘‘ஆண்ட’’ என்றது, ‘நிறைந்த’ என்னும் பொருளது. சோதித்த-ஆராய்ந்து துணிந்த ‘தூ மனம்’ என்றலேயன்றி, ‘தூய் மனம் என்றலும் வழக்கே. ‘தொண்டராய் உள்ளீர்’ என ஆக்கச்சொல் வருவிக்க. தேவர் நெறி-தேவரைப்பற்றி நிற்கும் நெறி. அந்நெறிகளின் முதல்வர் யாவரும் சில்லாண்டிற் சிதைந்தொழிபவராகலின், அவரால் தரப்படும் பயனும் அன்னதேயாம். அதனால் அவை சேரத்தகாத சிறுநெறிகளாயின. இவ்வுண்மை, சுருதியை நன்காராய்ந்தார்க்கல்லது புலனாகாதென்பது பற்றியே முன்னர், ‘‘சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்’’ என்றார். வில் ஆண்ட மேருவிடங்கன் வில்லாகப் பணிகொண்ட மேருமலையை உடைய அழகன். ‘மேருவை வில்லாக ஆண்ட அழகன்’ எனற்பாலதனை இவ்வாறு ஓதினார் என்க. விடைப்பாகன்-இடபத்தை ஊர்பவன். ‘‘பல்லாண்டு என்னும் பதம் கடந்தான்’’ என்றது, ‘காலத்தைக் கடந்தவன்’ என்றவாறு. பதம்-நிலை; என்றது பொருளை. ‘காலத்தைக் கடந்து நிற்பவனைக் காலத்தின் வழிப்பட்டு வாழ்க என வாழ்த்துதல் பேதைமைப்பாலது’ என்பதையும், ‘அன்னதாயினும் நமது ஆர்வத்தின் வழிப்பட்ட நாம் அங்ஙனம் வாழ்த்துவோம்’ என்பதையும் இங்கு இவர் உணர்த்தி நிற்றல் அறிக. இத்திருப்பாட்டின் முதலடியும், மூன்றாம் அடியும் ஐஞ்சீராகி வந்தன. |