சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


47.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்,
   கரையிலாக் கருணைமா கடலை,
மற்றவர் அறியா மாணிக்க மலையை,
   மதிப்பவர் மனமணி விளக்கைச்,
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
   திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
   குளிரஎன் கண்குளிர்ந் தனவே.                 (2)
 

47.     இறைவன். மெய்ந்நூல்களைக் கற்றவர்களால் அக்கல்வியின்
பயனாக அடைந்து அனுபவிக்கப்படுபவனாதலின்,  ‘‘கற்றவர் விழுங்கும்
கனி’  என்றார். ‘‘கற்றவர்கள்  உண்ணும்  கனியே போற்றி’’ என்ற
அப்பர்  திருமொழியைக்   (திருமுறை 6 32. 1)   காண்க.  கற்றதனால்
ஆய பயன் என்கொல்வாலறிவன்-நற்றாள் தொழாஅ ரெனின்’’(குறள்-2)
எனத்  திருவள்ளுவரும்  கல்விக்குப்  பயன்  இறைவன்   திருவடியை
அடைதலே என்று வரையறுத்தருளினார்.விழுங்குதல், உண்டல் தொழில்
நான்கனுள்,   ‘உண்டல்’   எனப்படுவது.   வாளா,  ‘கனி’  என்னாது,
‘கற்பகக்கனி’’   என்றார்.  அருமையுணர்த்துதற்கு,  கனி   முதலியவை,
உவமையாகு  பெயர்கள்.  ‘கரையிலாக் கடல்’ என  இயையும். மற்றவர்
கற்றவரல்லாதார்.   மதிப்பவர்-தலைவனாக   அறிந்து    போற்றுபவர்.
மணி-இரத்தினம்;  இஃது இயற்கையொளி உடையது.  ‘மாணிக்க மலை’’
என்றது,   செந்திருமேனியின்   அழகுபற்றி,  செற்றவர் - பகைத்தவர்.
செற்ற-அழித்த.   ‘‘உள்ளம்   குளிரக்   கண்  குளிர்ந்தன’’  என்றது,
‘ஞாயிறுபட வந்தான்’ என்பதுபோல உடனிகழ்ச்சியாய் நின்றது.  


மேல்