சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


67.

குன்றேந்தி கோகன கத்தயன்
   அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
யென்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
   இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்ப புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
   நவலோக நாயகன் பாலளே.                   (10)
 

67.   குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்;
திருமால்.  கோகனகத்து  அயன் - தாமரை மலரில் இருக்கும்  பிரமன்.
இவ்விருவரும்  அறியா  நெறி,  சிவஞான  நெறி.  எல்லை  -  உலக
முறைமை.   ‘பொன்னியை   ஆவடுதுறைக்கண்   ஆடினாள்’   என்க.
‘ஆடினாள்  ;  அன்றே  இவள்  நம்பரம் அல்லள்; நன்றே  நவலோக
நாயகன்  பாலளே’  எனக்  கூட்டுக.  பரம் - சார்பு. நவம்  - புதுமை;
இங்கு வியப்பைக் குறித்தது.


மேல்