4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
18. திருவாரூர்
184. | பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா இருக்கும், தேவர்காள், இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர் ! சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடங்குலா வினரே. (2)திருச்சிற்றம்பலம் |
184. ‘‘தேவர்காள்’’ என்பதனை முதலிற்கொண்டு, அதன் பின்னர்ப் பின்னிரண்டடிகளைக் கூட்டியுரைக்க. ‘உணர்வோர் பருகுதோறு’ என இயையும். ‘வாய்மடுத்துப் பருகுதல், என்பது பான்மை வழக்கு. ‘‘அவர்க்கே’’ என்ற பிரிநிலை ஏகாரம், பிறர்க்குத் தித்தியாமை குறித்து நின்றது. தித்தியா-தித்தித்து. இருந்தவா-இருந்தவாற்றை. தேவர்களை நோக்கிக் கூறினார். ‘யாம் திவ்விய தேகமும் (ஒளியுடம்பு) உடையோம்; அதனால் தேவராய் நிற்கின்றோம் எனச் செருக்குகின்ற உங்கள் உருவத்தின் ஒளி இவரது திருவுருவத்தின் ஒளிக்கு எட்டுணையேனும் போதாமையைக் கண்டு அடங்குமின்கள்’ என்றற்கு. இனி வருவன அத்திருவுருவத்தின் பெருமைகள். சத்தியாய்-அம்மையாய். சிவமாய்-அப்பனாய், தனிமுழு முதலாய்-அவ்வாறு நிற்றலானே உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய், அதற்கு ஓர் வித்துமாய்-தம்மால் படைக்கப்பட்ட அவ்வுலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய். |