சொல்லகராதிச் சுருக்கம்

சேந்தனார் திருப்பல்லாண்டு

29. கோயில்


296.

சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
   கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
   புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
   வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.                        (8)
 


296. சேல், கயல் என்பன மீன்வகை. ‘சேலும் கயலும் போல’ என
உவம  உருபு  விரிக்க.  திளைக்கும்-பிறழ்கின்ற. ‘‘குங்குமம்’’ என்றது.
குங்குமங்  கூடிய சாந்தினை. ‘குங்குமம் போலும் பொடி மார்பின்கண்
இலங்கும்’ என்க. அணி-அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும்,
‘மார்பிற்  பொடி,  கொங்கையிற்  குங்குமம்போல  இலங்கும்’ என்றல்
கருத்தென்க.   இதனால்    இறைவன்    மார்பில்   உள்ள திருநீறு,

மங்கையர்     கொங்கையில் உள்ள குங்குமம் காமுகரை வசீகரித்தல்
போலப்    புண்ணியரை   வசீகரித்தல்   கூறப்பட்டது.   புண்ணியர்
சிவபுண்ணியத்தின்   பயனாகிய  சிவஞானத்தைப்  பெற்றவர்.  நெறி,
சிவஞானம்.    வந்து-அழகிய    கோலத்துடன்    வந்து.   இதனை,
‘‘போற்றிசைப்ப’’ என்றதன்பின்னர்க் கூட்டுக.


மேல்