சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


65.

ஒழிவொன்றி லாஉண்மை வண்ணமும்
   உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
   முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
   அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை யெய்திநின்
   றிறுமாக்கும் என்னிள மானனே.                (8)
 

65.    ஒழிவு ஒன்று இல்லா- நீங்குதல் சிறிதும் இல்லாத. உண்மை
வண்ணம்   -   (ஆவடுதுறைப்பெருமானது)   உண்மை   இயல்புகள்.
உலப்பிலள்  - விடாது  சொல்வாளாகிய  இவள்;  இஃது “ஆடினாள்”
என்பதனோடு இயையும். இன்பவெள்ளம் -  இன்பப்பெருக்கு. மொழிவு
ஒன்று  இலாப்  பொன்னி  - சொல்லப்படுதல் சிறிதும் இல்லாத மிக்க
பெருமையையுடைய    காவிரி.    ‘‘முனி’’   என்றது,    அஃறிணை
வாய்பாடாய்ப்  பன்மை  குறித்து நின்றது. ‘முனிகளது  மூர்த்தி’ என்க.
மூர்த்தி  -  வடிவம்.  ‘முனிகள்  கோடி கோடி’ என்னாது, அவர்களது
‘வடிவு   கோடி  கோடி’  என்றார்,  அவர்கள்  இருந்து  தவம்புரியும்
காட்சியது   சிறப்புணர்த்தற்கு,  ‘திருவாவடுதுறை நவகோடி சித்தபுரம்’
எனக்  கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது  ‘வெள்ளமும், தீர்த்தமும்,
மூர்த்தியும்   அழிவில்லாத  சாந்தையூர்’  என்க.  சாந்தையூர்  அணி
ஆவடுதுறை  -  சாந்தையூரால்  அழகுபடுத்தப்படும்  திருவாவடுதுறை.
இங்கு,   ‘துறை’   என்றது,  துறைக்கண்  உள்ள  நீரை.  ‘ஆடினாள்;
அதனால்,    இழிவொன்றிலாவகை     (மேன்மையானநிலை)   எய்தி
இறுமாக்கின்றாள்’  என  உரைக்க.  ஈற்றில்,   ‘அன்னையே’  என்பது,
‘அனே’  எனக்  குறைந்து  நின்றது. மகளை, ‘அன்னை’  எனக் கூறும்
மரபு  வழுவமைதி, அகப்பாட்டுக்களில்  பயின்று வரும். ‘இளமானளே’
எனப்பாடம் ஓதுதல் சிறக்கும்.


மேல்