சொல்லகராதிச் சுருக்கம்

சேந்தனார் திருப்பல்லாண்டு

29. கோயில்


293.

புரந்தரன் மால்அயன் பூசலிட் டோலமிட்
   டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
   கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
   கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
   பல்லாண்டு கூறுதுமே.                        (5)
 


293.     புரந்தரன்-இந்திரன்.      பூசலிட்டு-போர்      செய்து.
ஓலமிட்டு-ஆரவாரம்  செய்து.  ‘‘இன்னம்’’ என்பது. ‘இதுகாறும் எனப்
பொருள்  தரும்.  ‘இன்னும்’ என்பதன் மரூஉ. இதனை, ‘‘இரந்திரந்து’’
என்பதற்குமுன்  கூட்டுக.  ‘முதற்கண் செருக்குற்று அறியமாட்டாராய்ப்
பின்னர்  வழிபட்டு நிற்பாராயினர்’ என்றவாறு. ‘அவரை ஆளாது, என்
உயிரை   ஆண்டான்’  என்று  அருளினார்.  தாமும்,  தம்  உயிரும்
வேறல்லர் ஆயினும், ‘உயிரை’ என வேறுபோலக் கூறினார். ஆண்டது
உடல்நலமாகாது  உயிர்நலமாய் நின்ற சிறப்புணர்த்தற்பொருட்டு. ‘‘என்
உயிர்’’ எனத் தமது உயிரையே எடுத்துக் கூறியதற்கு, மேல், ‘‘என்னை
ஆண்ட’’   (291)   என்றதற்கு  உரைத்தவாறு  உரைக்க.  என்-என்ன
கைம்மாறு.  என்றும்-என்று  சொல்லியும்.  உம்மை,  எதிரது தழுவிய
எச்சம்.    கரந்தும்-கண்ணிற்குப்    புலனாகாது   நின்றும்.  கரவாத
கற்பகனாகி-வேண்டியவற்றை   வேண்டியாங்கு  மறையாது  வழங்கும்
கற்பகத்தருப்போல்பவனாகி.  ‘‘ஆகி’’  என்றது, ‘‘வரம்பிலர்’ என்பதில்
‘‘இல்லா’’  என்பதனோடு  முடியும். ‘கருணைக் கடலாய்’ என ஆக்கம்
விரித்து,  ‘ஆக்கம்,  உவமை  குறித்து நிற்ப, கருணைக் கடல் என்பது
இல்பொருளுவமையாய்    நின்றது’    என    உரைக்க.   கருணைக்
கடல்-கருணையை      உடைய     கடல்.     பரந்தும் - விரிந்தும்.
நிரந்தும்-இடையீடின்றி நிறைந்தும். இவையும், ‘‘இல்லா’’ என்பதனோடு
முடியும்.  ‘அழகு’  எனப்  பொருள்  தரும்  ‘‘பாங்கு’’ என்பது இங்கு,
‘மேலான தன்மை’ எனப் பொருள் தந்து நின்றது.


மேல்