ஒன்பதாம் தந்திரம்

8. திருக்கூத்துத் தரிசனம்

1எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும்
தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே.
உரை
   
2சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்
சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார் அறிவாரே.
உரை
   

சிவானந்தக் கூத்து

1தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்து ஆட ஆட அரங்கு ஆனதே.
உரை
   
2ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல் இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே.
உரை
   
3ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமயக்
களியார் பரமும் கருதுறை அந்தத்
தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே.
உரை
   
4ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே.
உரை
   
5பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங் கருமத்து ஆண்ட தற்பரம்
தேகாந்தம் ஆம் பிரமாண்டத்த என்பவே.
உரை
   
6வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே.
உரை
   
7பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே.
உரை
   
8வேதங்கள் ஓட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழு ஆடப்
பூதங்கள் ஆடப் புவன முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.
உரை
   
9பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே.
உரை
   
10தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா தரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சரா சரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே.
உரை
   

சுந்தரக் கூத்து

1அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திரு உருக்
கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே.
உரை
   
2கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும்
திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை
வடம் உற்றமாவனம் மன்னவன் தானே.
உரை
   
3பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே.
உரை
   
4அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே.
உரை
   
5ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக்
கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.
உரை
   
6சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே.
உரை
   
7மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே.
உரை
   

பொன்பதிக் கூத்து

1தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
உரை
   
2அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே.
உரை
   
3அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன்
படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே.
உரை
   
4உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே.
உரை
   
5மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப்
பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை
ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே.
உரை
   
6விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள்
அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே.
உரை
   
7தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் உறும் குறு நாடகம் காணவே.
உரை
   
8காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.
உரை
   
9மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும்
சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு
ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.
உரை
   

பொற்றில்லைக் கூத்து

1பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே.
உரை
   
2அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப்
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத்
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக்
கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே.
உரை
   
3குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம்
சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே.
உரை
   
4ஆதி பரன் ஆட அங் கைக் கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆடப்
பாதி மதி ஆடப் பார் அண்டம் மீது ஆட
நாத மோடு ஆடினான் நாத அந்த நட்டமே.
உரை
   
5கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டம் ஆம்
செம் பொருளாகும் சிவலோகம் சேர்ந்து உற்றால்
உம்பர மோன ஞான அந்தத்தில் உண்மையே.
உரை
   
6மேதினி மூ ஏழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்று எட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பதப்
பாதியோடு ஆடிப் பரன் இரு பாதமே.
உரை
   
7இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை
கடவும் திலை வனம் கை கண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரம் ஆம் பரமே.
உரை
   
8ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவ தீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேத ஆகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே.
உரை
   
9நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடிப் புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே.
உரை
   
10தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப்
பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக்
கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே.
உரை
   
11ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமயக் குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்குத் திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே.
உரை
   
12அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே.
உரை
   
13ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆடத்
தேடி உளே கண்டு தீர்ந்து அற்ற வாறே.
உரை
   
14இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கர சரண் ஆதி கலக்கும் படியே
அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.
உரை
   

அற்புதக் கூத்து

1குரு உரு அன்றிக் குனிக்கும் உருவம்
அரு உரு ஆவதும் அந்த அருவே
திரிபுரை ஆகித் திகழ் தரு வாளும்
உரு அருவு ஆகும் உமை அவள் தானே.
உரை
   
2திரு வழி ஆவது சிற்றம் பலத்தே
குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே
உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அவ்வழி தானே.
உரை
   
3நீரும் சிரசு இடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட
நாடு மின் நாத அந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே.
உரை
   
4வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு வாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே.
உரை
   
5தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யும் ஆறே.
உரை
   
6கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே.
உரை
   
7இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படம் கொடு நின்ற இப் பல் உயிர்க்கு எல்லாம்
அடங்கலும் தாம் ஆய் நின்று ஆடு கின்றாரே.
உரை
   
8சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனி ஆம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே.
உரை
   
9நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம்
சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே.
உரை
   
10அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா சிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவ ஆசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே.
உரை
   
11மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை
சென்றது தான் ஒரு பத்து இரு நூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே.
உரை
   
12அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி
அண்ட நடம் செயும் ஆலயம் தானே.
உரை
   
13ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கை கள்
மோகாய முக் கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய் கின்றானே.
உரை
   
14அம்பலம் ஆவது அகில சரா சரம்
அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி
அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே.
உரை
   
15கூடிய திண் முழவம் குழலோம் என்று
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன
நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள்
பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே.
உரை
   
16அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள்
புண்டரிகப் பதப் பொன் அம்பலக் கூத்துக்
கண்டு சேவித்துக் கதி பெறுவார் களே.
உரை
   
17புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா போல்
களிக்கும் திருக் கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே.
உரை
   
18திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
உரை
   
19அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை யோர் பாகம் ஆய் நடம் ஆடுமே.
உரை
   
20ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக்
கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி
நீடியநாதம் பரால் பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே.
உரை
   
21ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்பு உறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்பு உறும் ஏழினும் ஏழ் ஐம் பத்து ஆறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
உரை
   
22ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரம் சோதி
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே.
உரை
   
23மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவு ஆகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
உரை
   
24தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை
வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும்
கா மணி ஞாலம் கடந்து நின்றானே.
உரை
   
25புரிந்தவன் ஆடில் புவனங் களோடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே.
உரை
   
26ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே.
உரை
   
27ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து
அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத்
துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே.
உரை
   
28தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச்
சித்தமும் ஆடச் சிவ சத்தி தான் ஆட
வைத்த சரா சரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
உரை
   
29இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த்
திரு அருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே.
உரை
   
30சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச்
சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே.
உரை
   
31நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும்
தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து
நாதப் பிரமம் சிவ நடம் ஆமே.
உரை
   
32சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத்
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத்
தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும்
தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே.
உரை
   
33கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத்
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே.
உரை
   
34நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படா வண்ணம் பின்னி நின்றானே.
உரை
   
35ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே.
உரை
   
36திருந்து நல் என்று உதறிய கையும்
அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும்
பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும்
திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே.
உரை
   
37மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நம என ஓதே.
உரை
   
38அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரன் அடி என்றும் அனுக் கிரகம் என்னே.
உரை
   
39தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
உரை
   
40நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என் சொல்லும் ஆறே.
உரை
   
41சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆய் உறு மேனியை யாரும் அறிகிலர்
தீய் உறு செம்மை வெளுப் பொடு அத் தன்மை
ஆய் உறு மேனி அணை புகல் ஆமே.
உரை
   
42தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும்
தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே.
உரை
   
43பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச்
சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து
உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச்
சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே.
உரை