171
 

(ப. இ.) புண்ணியனாகிய நந்தி என்று ஓதப்பெறும் சிவபெருமான் பொருந்துதலினாலே திருவருளாற்றலாம் சத்தியும் உலகமெங்கணும் தண்ணளியுடன் பொருந்தி நிற்பர். பொருந்தி மானாகிய உடல்மெய்யினை வளர்த்தருள்வன். கண்ணுதலாகிய திருவுள்ளங் கொண்ட இயல்பினாலே ஐம்பூதம் முதலிய தத்துவங்கள் ஒன்றோடொன்று கலந்து நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு முதலாகிய உலகங்களாக விரிந்து தோன்றும். இப்பூதங்கள் அகத்தும் புறத்தும் காணப்படும். புறத்துக் காணப்படுவது அண்டம் எனவும், அகத்துக் காணப்படுவது பிண்டம் எனவும் கூறுப. கண்ணுதல் - கருதுதல். உடல்மெய் - ஆன்மதத்துவம்.

(7)

375. நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.1

(ப. இ.) ஐம்பூதங்களுள் மண்ணானது எல்லாவற்றையும் தாங்கி நிலைப்பிக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அதனான் மண்ணினை நிலைப்பிறப்பாம் என்றனர். அதன் மேல் விளங்கும் நீரகத்துச் சுவை இன்பம் தோன்றும். அதன்மேல் நெருப்பினிடத்து ஒளி தோன்றும். அதன் மேல் காற்றினிடத்து உயிர்ப்புப் பிறக்கும். அதன்மேல் வானத்தினிடத்து ஒலி தோன்றும். காயம்: ஆகாயம்; முதற்குறை, வானம். உயிர்ப்பு - மூச்சு. நல்லுயிர்ப்பு - அனைத்துயிர்க்கும் ஒத்த நன்மைதரும் காற்று. ஓர்வுடை ஒலி - ஆராய்வதற்கும் நிறைவுறுதற்கும் துணையாம் ஓசை. ஆதம் - ஒளி; ஆதபம் என்பதன் இடைக்குறை இத் திருப்பாட்டு ஐம்பூதங்களின் தோற்றமுறை கூறுகின்றது. ஐம்பூதங்களும் ஐந்து தன் மாத்திரைகளினின்றுந் தனித்தனி தோன்றுவன. ஒரு பூதத்தினின்று மற்றொரு பூதம் தோன்றுவதன்று. அங்ஙனம் தோன்றுவனவாகச் சொல்லுவது ஏற்றுரையே. ஏற்றுரை - உபசாரம். வானத்தினின்றும் காற்றுத் தோன்றும் என்பதற்குரிய காரணம் காற்றினிடத்து அதன் இயற்கைப் பண்பாகிய ஊறுமட்டு மன்றிச் செயற்கையாகிய வானத்தின் பண்பாம் ஓசையும் விரவியிருப்பதால் அச்சிறப்பு நோக்கி வானத்தினின்றும் காற்றுத் தோன்றிற்று என்பதாம். இது தலைவியைச் செவிலி பெற்றமகளென நற்றாய் நவில்வதை ஒக்கும். நற்றாய் மகளென்றல் நண்ணும் இயல்பாகும், உற்ற செவிலிக்காம் சிறப்பு என்பதை நினைவிற் கொள்க. உண்மையான் நோக்குவார்க்குக் காற்று ஊற்றுத் தன்மாத்திரையினின்றுந் தோன்றும் என்பதே வாய்ப்புடைத்தாம். ஊற்றுத் தன்மாத்திரையில் ஓசைப் பண்பும் விரவியிருக்கும். அங்ஙனம் ஊற்றுத் தன்மாத்திரையில் விரவியிருக்கும் ஓசையோடு சிறப்புற்று நிற்கும் ஊற்றுத் தன்மாத்திரையினை ஆகாயம் எனக் கூறுவர். அவ்வாகாயத்தினின்றுங் காற்றுத் தோன்றும் என்பர். மேவும் வேற்றுப் பண்பிடமாய் விளம்புவரால், தாவில் சிறப்புணர்த்துதற்கு. ஆதலால் அமையும் என்க. இப்படியே மற்றைப் பூதங்களும் தோன்றும் என்ப. இத் திருப்பாட்டில் காணப்படும் உயிர்ப்பு, ஆதம், ஒலி, சத்தி, நிலை என்பன முறையே காற்று, தீ, வானம், நீர், நிலம் என்னும் பூதங்களின் பண்புகளாம்.

(8)


1. இரந்தர. சிவஞான சித்தியார், 2. 3 - 6.