1101
 

இதனையே நாயோட்டு மந்திரம் என நவின்றனர். பழங்காலத்துப் பொதுவாக மந்திரங்களை உய்த்துணருமாறு மாத்திரைகளைக் கூட்டியும் குறைத்தும் (2751) ஓதுவாராயினர். அம் முறையில் ஈண்டுச் சிகரத்தைச் சீ என மாத்திரை கூட்டி ஓதுவாராயினர். எனவே நாயோட்டு மந்திரமாகிய சிகரத்தின்கண் நான்மறைவேதங்கள் அடங்கும். அச் சிகரமே நாதன் இருப்பிடமாகும். அச் சிகரமே அருஞ்சைவர் மெய் ஆறாறுக்கு அப்பாலுள்ள இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளியாகும். இவ்வுண்மையை அல்லாமல் வெளிப்படையாகக் கூறும் 'சீ' என்பதே நாயோட்டு மந்திரம் எனக்கொண்டு பொருள் காணலுறின் அப்பொருளை நாமறியோம் என்க.

(அ. சி.) நாயோட்டு மந்திரம் - சி.

(4)

2673. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வாரில்லை
எழுத்தறி வோமென் றுரைப்பர்கள் ஏதர்
எழுத்தை யழுத்தும் எழுத்தறி 1யாரே.

(ப. இ.) செந்தமிழ்ப் பழமறைகளுக்குள்ளே பழுத்து முதிர்ந்தன 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தாகும். அதனை 'நம் செயலற்று நாமற்றுப் பின் நாதன், தன் செயலாகவே நின்று' நாடுதல் வேண்டும். அந் நாட்டத்தினை விழித்துறங்கும் நிலை என்பர். இதனை அறி துயில் எனவும் கூறுப. இத்தகைய ஒன்றாவுயர்ந்த உண்மை நிலையினை அறிவாரில்லை. அறியாமைக் குற்றம் பொருந்திய மூடர்களாகிய ஏதர்கள் 'சிவயநம' என்னும் எழுத்தைந்தும் வன்மை மென்மை இடைமை கலந்தனவேயாம்; இவையனைத்தும் நெடுங்கணக்கிலுள்ளனவே; இவற்றை யாங்கள் அறிவோம் என்று கூறுவர். அவர்கள் அத் திருவைந்தெழுத்தை ஏனைய எழுத்துக்கள் போன்ற எழுத்தாகமட்டும் கருதினர். அது பிறப்பினுக்குரிய எழுத்தை அழுத்தும் படைக்கலமாகிய எழுத்தென. அறியார். அறிவரேல் உண்மையறிந்தாராவர். நடைமுறையொழுக்கிற் கைக்கொண்டு பெரும்பயனும் எய்துவர்.

(அ. சி.) ஐந்தும் - அஞ்சு எழுத்துக்களும். ஏதர் - மூடர். எழுத்தை அழுத்தும் - விதி எழுத்தை மாற்றும். எழுத்து - சி.

(5)


1. படைக்கல. அப்பர், 4. 81 - 8.

" புத்தர்ச. சம்பந்தர், 3. 22 - 10.

" யாழுமெழுதி. 8. திருக்கோவையார், 70.