798
 

மற்ற தன்னை மெய்யன்பர்கட்குச் சுற்றமாகக் கொடுத்தருளும் துணைவன். என்றும் அழியா நிலைமையன். இயற்கைத் தூய்மையன். சிவமெய்யடியார் கூட்டத்துத் திருவருளால் கூடி மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் தத்துவம் உணர்ந்தோராவர். அவரே மலப்பகை யற்றவருமாவர். அத்தகையோர் பேரன்பினராவர். அவர்க்குத் திருவடிப்பேறளிப்பவனே நிலைபெற்ற மெய்க்குரவனாவன்.

(அ. சி.) நேயம் - சிவநெறி. ஆயத்தவர் - சிவனடியார் கூட்டத்தில் இருப்பவர். அற்ற நேயர் - ஆசை அற்ற அடியார்.

(5)

2016. பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோற்
குருபரி சித்த குவலயம் எல்லாந்
திரிமலந் தீர்ந்து சிவகதி 1யாமே.

(ப. இ.) பொன்னாக்கு மருந்து பரிசனவேதி எனப்படும். இதனைப் பொன்னாக்குவது எனப் புகலினும் பொருந்தும். பண்டையோர் இதனைக் குளிகை என்றனர். அக் குளிகை உலகியற்பொருள்களில் இயைபுடைய பொருள்கள் எல்லாவற்றினும் பட்ட அளவானே அவை முற்றும் பொன்னாகிவிடும். அதுபோல் மெய்க்குரவனாகிய சிவகுரு தொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று ஆருயிர்க்கிழவர் செம்மலர் நோன்றாள் சேர்ந்து சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக்கீழிருப்பர்.

(அ. சி.) பரிசனவேதி - உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து.

(6)

2017. தானே யெனநின்ற சற்குரு சந்நிதி
தானே யெனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டுஞ் சதுர்பெற
ஊனே யெனநினைந் தோர்ந்துகொள் 2உன்னிலே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிருடன் பின்னி அவ் வுயிராகவே நின்றருள்கின்றனன். அவன் திருமுன் அந் நிலைபோல் அவ் வுயிரைத் தன்னுள் அடக்கி அவ் வுயிர் தானாயே நின்றருள்வன். இது கற்றுவல்ல புலவன் தன் புலமை மேலோங்காது தானாகப் புலமை உள்ளடங்கி நிற்கப் பொதுவாக ஆளெனத் தோன்றுவன் அப் பொதுநிலையாம் ஆளியல்பு உள்ளடங்கப் புலமை மேலோங்கச் சிறப்பாகப் புலவன் எனப் புகழப்படுவன். ஆள்புலவன் ஆர்ந்த புலனடங்க ஆளாமவ், வாளடங்க ஆம்புலவன் அங்கு என்பதனையொக்கும். இம் முறைபோல் உயிர் சிவனாம் தன்மை வெளிப்படில் அவ் வுயிர் திருவடியுணர்வால் தானாகவே தனையுணர்தல் வேண்டும். பெருமைமிக்க இவ் வுடம்பிலே உன்னகத்தே உன்னையும் உடையானையும் மெய்யுணர்வால் உன்னி உணர்ந்து கொள்வாயாக.

(அ. சி.) தனைப்பெற - தன்னை அறிய. சதுர் - பெருமை. ஊனே என - இந்த உடலிலேயே என்று.

(7)


1. இந்தனத்தி. சிவஞானசித்தியார், 9. 3 - 6.

2. அவனேதானே. சிவஞானபோதம், 10.