(ப. இ.) தொன்றுதொட்டு நீண்ட நாட்களாக நாம் நலம் பல அடைந்து நல்வாழ்வு எய்துதற் பொருட்டுச் சிவபெருமானை வாழ்த்தி வழிபடப் பல காலங்களைப் பாங்கொடும் அமைத்தருளினர் செம்பொருட் செல்வர். அவை ஆறு எனவும் நான்கு எனவும் கூறுப. ஆறு: சிறுபொழுதாறாகும்; 'மாலையாமம்வைகுறுவிடியல், காலை நண்பகல் ஏற்பாடென்ப.' நான்கு, "காலை கடும்பகல் மாலை வீங்கிருள்" என்பன, இக் காலங்கள் பல வேறுவகையான குடும்பத்தார்களும் குறிக்கோளுடன் வணங்குவதற்கு வாய்ப்பினவாகும். அவற்றுள் நனிமிகு பலனை இனிமையுடனும் எளிமையுடனும் தரத்தக்க சிறந்த வண்மைக்காலம் இரண்டாகும். அவை உழைப்புறு பயனை உண்டு மேலும் உழைப்பதற்காம் உரன் பெறுதற்பொருட்டு இளைப்பாறுவதாகிய உறக்கத்துக்குச் செல்லுங்காலம் ஒன்று. மற்றொன்று உறங்கி விழித்து உன்னிய அனைத்தும் உடையான் நினைவுடன் உழைக்க எழுங்காலம் ஒன்று. ஆக இத்தகைய இரண்டு காலங்களிலும் இன்றியமையாது நினைந்து வழிபடவேண்டுவது நம் கடனாகும். அச் சிவபெருமான் வழிபாட்டிற்குரிய நிலமும் உருவும் கலமும் பலவாகக் கொண்டு வழிபடுவார்க்கும் அவ்வவ்வாறே தோன்ற அருள்புரியும் செவ்விய நீர்மையனாவன். இனி இருகாலம் என்பதற்கு எச் செயற்கும் முன்னும் பின்னும் ஆகிய இரு காலங்கள் எனலும் ஒன்று. ஒருபுடையாக உழைத்தலே உண்டல் இழைத்த லுணர்தல், தழைத்தலுறங் கல்லிருமுப் போது எனக் கொள்ளுதல் ஏற்புடைத்து. கலம் - கருவிகள். "நம்மூல ராற்போற்ற நால்வரால் நாட்டநிலை செம்பொருட்சித் தாந்தசைவம் தேறுங்கால் - அம்பொனருள் 'சிந்திப்பார்' 'காலை' 'படைக்கலமா' 'வாழ்க' 'என்றும்' வந்திப்பார் நாற்போதை வாழ்த்து." என்னும் வெண்பாவினை நினைவு கூர்க. நாற்போதை: நாற்போது + ஐ. ஐ மேற்குறித்த ஐந்து திருப்பாட்டுக்களைக் குறிக்கும். (6) 2503. ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. (ப. இ.) யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயையிரண்டாய், வீடாய், திருவடிப் பேறாய் விளங்குவன். இத்தகைய முறைமையுடன் கூடிய ஒன்பது வேறுபாட்டுடன் விளங்கியருள்பவன் முழுமுதல்வனாகிய சிவபெருமானே. ஆதி - முழுமுதல்வன். (7) 2504. தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் 1பெற்றதே. 1. திருநாம. அப்பர், 6. 95 - 6.
|