சித்தாந்த சைவப் பெருமை மிக்க சான்றோர் அன்புடன் புகழும் பொருள் சேர்புகழ்த் திருமேனியை உடையவன் சிவன். கண்ணுள் நிலைத்து நிற்கும் கருமணி போன்றவன் சிவன். மா - கருமை. சிவகுருவினால் போதிக்கப்பெறும் விழுப்பொருள் சிவபெருமான். கண்ணின்ற என்றதற்குக் கருத்துள் நின்ற என்றலும் ஒன்று. இப்பொருட்கு மாமணி என்பதற்குத் திருவைந்தெழுந்து எனக்கொள்க. (அ. சி.) மண்ணின்ற வானோர் - உலகத்திற்கு வந்த வானவர். (9) 435. ஆரும் அறியாத அண்டத்1 திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே. (ப. இ.) மக்கள் தேவர் மூவர் முதலிய யாவராலும் அறிய வொண்ணாத அண்டத் திருவுருவை உடையவன் சிவன். உலகங்களுள் உயிர்க்கு உயிராய் நிற்கின்ற ஒப்பில் திருவுருவன் சிவன். நிலமுதலாகச் சொல்லப்படும் பெரும் பூதங்களுள் பயின்று விளங்குபவனும் சிவனே. தக்ககலத்தில் தூயநீரில் கலந்துள்ள பால்போல் சிவபெருமான் கலந்து நிற்கும் சிறந்த தன்மையை உடையவன். பால் தன் வண்ணத்தையும் சுவையினையும் நீருக்கு நல்கி நீரென்னும் பெயரினை மாற்றிப் பால் என்னும் தோற்றமும் பெயரும் பெறச் செய்கின்றது. அதுபோலவே சிவபெருமான் ஆருயிர்களைத் தூய்மையாக்கித் தன் எண்குணங்களையும் பதிவித்துச் சிவமாம் பெருவாழ்வை அருளுகின்றனன். அதனால் அவ்வுயிர்கள் திருவடிப் பேரின்பத்தைத் துய்க்கின்றன. சிவனெனவே அழைக்கப் பெறுகின்றன. இதுவே புறத்தும் அகத்தும் புலனாகும் சிவ இன்பமாகும். இவ்வுண்மையினைத் திருவருளால் அறிந்து தீரா இன்புற்றேன் என்க. நேர்மையை - உண்மைத் தன்மையை. சோராமல் - மறந்து விடாமல். காணும் - நுகரும். சுகம் - பேரின்பம். (10)
14. கரு உற்பத்தி 436. ஆங்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாங்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் ஆங்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்து ஆங்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.2 (ப. இ.) உயிர்கள் இறந்தபின் வினைக்கீடாக அச்சுமாறிப் பிறக்கும். அச்சுமாறுதல் - பருவுடம்பு மாறுதல். பருவுடம்பு மாறுதலாவது ஆண் பெண்ணாக மாறலாம்: பெண் ஆணாக மாறலாம்; அம்மட்டோ? உயர் திணை அஃறிணையாகவும் மாறலாம்; இவ்வகை மாறுதல் என்க. திணைபால்கள் சேரும் வினைக்கீடாமாறி, அணைபிறப்பாம் மக்கட்கறி. இறந்தவுயிர் நுண்ணுடம்பாகிய புரியட்ட வடிவத்துடன் மீண்டும் கருவில் பிறக்கும். புரியட்டவடிவம்; தன்மாத்திரை
1. அண்டமா. அப்பர், 4. 7 - 4. 2. கண்ட சிவஞானபோதம். 2. 3 - 1.
|