18. தீர்த்தம் 492. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.1 (ப. இ.) தீர்த்தங்கள் - ஆண்டவனை மறவாமையாகிய அன்பும், அவன் பெருந்துணையாகிய அருளும், அவ் அருளால் கணிக்கும் 'சிவயசிவ' என்னும் திருவைந்தெழுத்தும், அம் மறை வண்ணமாகிய நாயன்மார் திருவுரு முதலியவற்றில் நிறைந்துநிற்கும் சிவனருளும் உள்ளத்து ஓவா துன்னத் தீர்த்தங்களாகும். மெள்ளக் ...வினை கெடப் - பிறப்பிற்கு ஏதுவாகிய வினையும், அதற்கேதுவாகிய மலமும்அகல மேற்கூறிய உள்ளத்துள்ள தீர்த்தங்களை நன்மனத்துடன் கைக்கொண்டால், அவ்வாறு முடியும்; அங்ஙனம் செய்யார். பள்ளமும் ...ளோரே - காடும் மலையும் சுற்றித் திரிவோர் திருமுறைக் கல்வியில்லாதவராவர். (1) 493. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றுங் குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்குந் தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. (ப. இ.) தண்ணிது - குளிர்ந்தது; இன்பம். ஒண்ணான் - பொருந்தான். வளி - காற்று; உயிர்மூச்சு. (ஈண்டு மன ஒருக்கமாகிய யோகப் பயிற்சி) வாய்க்கினும் வாய்க்கும்: நானெறியு ளொன்றாகிய சிவயோகத்தால் வாய்க்கச்செய்யும். தெளியறி ...ளானே - திருவடி யுணர்வுடையார் தம் தூயவுள்ளத்துறையும் சிவபெருமான். (அ. சி.) தளி - இரக்கம். குளி - உலக அறிவு. (2) 494. உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாருங் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்தி லிட்டதோர் பந்தருள் ளானே.2 (ப. இ.) மெய்யடியார்தம் அன்புடலாகிய பள்ளத்தில் அமைத்த இறைபணியாகிய பந்தர் நிழலில் உள்ள சிவபெருமான். உள்ளத்தின்... ஒருவனை - மலம்நீங்கிய அன்பர் உள்ளத்தில் உணர்வுக்கு உணர்வாய் உணரப்படும் ஒப்பில் ஒருவனாம் சிவபெருமானை. கள்ளத்தி ...வார் இல்லை - தீநெறிக்கண் செல்வார் யாரும் கலந்துநிற்கும் சிவனை அறியமாட்டார். வெள்ளத்தை ...தீவினை - அவர் தீவினை எஞ்சுவினையாகிய வெள்ளத்தை நாடிச்சென்று கூடிவிடும். வெள்ளம் - அளவிறந்த தொகை. திருத்தநீராகிய வெள்ளத்தை எனினும் அமையும். இப்பொருட்கு வெள்ளத்தை நாடவிடுமவர் தீவினை என்க. நாடி : எச்சத் திரிபு. (3)
1. கோடி தீர்த்தங் அப்பர். 5. 99 - 9. 2. உள்ள முன்கலந் " " 52 - 3.
|