1. |
உலகெ
லாமுணர்ந் தோதற் கரியவன்
|
|
|
நிலவு
லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
|
1 |
(இதன் பொருள்) உலகு எலாம் உணர்ந்து
ஓதற்கு அரியவன்
- உயிர்கள் எல்லாவற்றாலும் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன்;
நிலவு உலாவிய நீர்மலிவேணியன் - (அங்ஙனம் அரியவனாயினும்
தன்னை யாவரும் எளிதில் கண்டு தரிசித்து உய்ய வேண்டும்
என்னும் கருணையினால்)மூன்றாம் பிறைச்சந்திரன் உலாவுதற்கு
இடமாய்க் கங்கை நீர்நிறைந்த சடையை உடையவனாயும்; அலகு
இல்சோதியன் - அளவில்லாத ஒளியுரு வுடையனாயும்; அம்பலத்து
ஆடுவான் - திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தினிடத்தே
ஆனந்தத் திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள இறைவனுடைய;
மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் - எங்கும் நீக்கமின்றி
மலர்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம்
செய்வோம்.
(விளக்கவுரை)
உலகு - என்றது உயிர்களைக் குறித்து
நின்றது; “காலமுலகம்” என்றதற்குச் (தொல்) சேனாவரையர் உரை
பார்க்க. மூவகை ஆருயிர் வருக்கம்.
உணர்ந்து
ஓதற்கு அரியவன் - உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன். உணர்தல் மனத்தின்
தொழில்; ஓதுதல் - வாக்கின்
தொழில். எனவே பசுஞான பாசஞானங்களின் விருத்திக்கு
அப்பாற்பட்டவன் என்பதாம். வாக்கெனப்படும் நாதமுடிவான
பாசஞானத்தை வாக்கென்றும், அவற்றின் வேறாய பசுஞானத்தை
மனமென்றும் கூறுதல் உபசாரவழக்கு. “மாற்ற மனங்கழிய நிறை
மறையோன்” (திருவாசகம்) என்பதாதி திருவாக்குக்கள் காண்க.
இங்குக் குறித்தது இறைவனது சொரூப இலக்கணம். இது ஞானிகள்
வழிபடுவது. “அரியானை.........யார்க்கும் தெரியாத தத்துவனை.....”
என்று இவரை அப்பர்சுவாமிகள் துதித்த கருத்தும் காண்க.நிலவு
உலாவிய நீர்மலி வேணியன் - இஃது இறைவனது தடத்த
இலக்கணங் குறித்தது. இஃது அவனுடைய அருவுருவத்
திருமேனி.
அருவத் திருமேனியிலிருந்து உருவத் திருமேனி தாங்கி வருவது
உயிர்களுக்கு அருள்புரியும் பொருட்டு. நிலவும் நீரும் சடையிற்
றாங்கிய வரலாறுகள் அவனது அருளைக் குறிப்பன.
இவ்வரலாறுகளின் விரிவைக் கந்தபுராணம் முதலியவற்றிற் காண்க.
உலவுந் தன்மையுடைத்தாயிருந்தும் சாபத்தால் வந்த குறைநோய்
காரணமாக உலவுதலை யிழந்த நிலாவை உலவும்படி வைத்தான்;
ஓடுந்தன்மையுடைய நீரினை ஓடாமல் தங்கவைத்தான்; என்று
இச் செயல்களின் பெருமை குறித்தவாறு.
“நில்லாத நீர்சடைமேல் நிற்பித்தானை நிலமருவி
நீரோடக்
கண்டான் றன்னை” (வாகீசர்) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
நிலவு - ஞானாச்சந்திரகலை; வேணி - அனைத்தையு மோரியல்பா
லொருங்கறியுஞ் சர்வஞ்ஞத்துவ மெனப்படுமொருபெருஞ் சுடர்முடி.
உலாவிய என்பதனை உலவும்பொருட்டு என்ற பொருளில் வரும்
செய்யிய என்னும் வாய்பாட்டு வினை யெச்சமாகக் கொண்டு, நிலா
உலாவுந் தன்மை பெறும் பொருட்டுக் கங்கைநீர் மலிந்த வேணி
என்று உரைத்தலுமாம்; உலாவிய என்ற வினையெச்சம் மலி என்ற
வினை கொண்டது.
அலகில்
சோதியன் - “சோதி” - ஈண்டு ஞானவொளி.
“இவ்வொளி, விளக்க விளங்கும் இல்லக விளக்காகிய சுடர்
விளங்கும்,பல்லக விளக்காகப் பலருங் காணும் ஞாயிறு முதலிய
சுடர் விளக்கும், இந்திரிய அந்தக்கரண ஆன்மபோதமாகிய
ஆன்ம விளங்கும் அல்லதாய், இவை எல்லாவற்றையுங் கடந்து,
தற்பிரகாசமாயும் பரப்பிரகாசமாயும் நிற்றலான் அளவில் சோதியாய்,
எவற்றிற்கு மேலாக நிற்றலாற் பரஞ்சோதியாய்த், தானே
விளங்குதலாற் சுயஞ்சோதியாய், உள்ள பரஞானமான சிவஞானச்
சோதி என்றறிக.” - கயப்பாக்கம் - சதாசிவ செட்டியார், B. A.
அவர்கள் குறிப்பு. இஃது இறைவனது
அருவுருவத் திருமேனியாம்.
“திகழ் ஒளியை” என்ற வாகீசர் திருவாக்கும் காண்க. அலகில் -
அளவில்லாத; அளவிட முடியாத. பின்னர்த் தடுத்தாட்கொண்ட
புராணம் 193 -வது பாட்டில் “சோதியா யெழும் சோதியுட் சோதிய”
என்ற இடத்து உரைக் குறிப்புப் பார்க்க. மேலே கூறிய அருவம் -
உருவம் - அருவுருவம் என்ற திருமேனிகளையும் தாங்கிய
இறைவனே அம்பலத்திலே ஆடுகின்றவன் என்பதாம்.
அம்பலத்தாடுவான்
என்றது உருவத் திருமேனி. அம் பலமும்
ஆடும் இயல்பும் பயனும்பற்றித் “தோற்றந் துடியதனில்”’ “சேர்க்குந்
துடிசிகரம்” “மாயை தனையுதறி” (உண்மைவிளக்கம்) முதலிய ஞான
நூல்களையும்; மூவகைத் திருமேனிகளி னியல்பு பற்றி,
“உருமேனி
தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த அருமேனி
யதுவுங் கண்டோம்; அருவுரு வான போது
திருமேனி யுபயம் பெற்றோம்; செப்பிய மூன்று நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் விளைவு காணே”
-
சிவஞானசித்தியார்
|
“மன்றி
லானவெம் மியல்புனக் குரைக்கின் மாசி லாவுரு மூன்ற
வற்றருவம்
ஒன்று பேரொளி யொன்றரு வுருவ மொன்று தானரு
ளுருவமென்றுணர்வாய்”
-
திருவாதவூரர் புராணம்
|
முதலிய ஆதாரங்களையும்
காண்க; இருதய கமல சிற்சபா நடன
தசரவித்தை வரலாறும் இதனை உபாசிக்கு முறையும் பற்றிச்
சாந்தோக்கியங் கைவல்ய முதலிய உபநிடதங்களினும்,
சிவாகமங்களினும் கண்டு கொள்க.
“‘உலகெலா
முணர்ந் தோதற் கரியவன்’ என்பதனாற், சொரூப
சிவ வியல்பும், ‘அலகில் சோதியன்’ என்பதனாற் றடத்த விலய
சிவவியல்பும், ‘அம்பலத்தாடுவான்’ என்பதனான் தடத்த அதிகார
சிவவியல்பும்’ ‘நிலவு லாவிய நீர்மலிவேணியன’ என்பதனான் தடத்த
போக சிவலியல்பும் கூறப்பட்டமை யறிந்து கொள்க.” - கயப்பாக்கம்
சதாசிவள செட்டியார், B. A.அவர்கள் குறிப்பு.
இனி,
இவ்வாறன்றி, அரியவனாகிச் சோதியன் என்றும்,
வேணியனாகி ஆடுவான் என்றும் இரண்டாகப் பகுத்து நிரனிறையே
கூட்டிப் பொருள் உரைத்தலும் ஆம். இங்ஙனம் கொள்ளும்போது
அவனே தானாகிய வந்தெறி ஏகனாகி நின்று கருவி கரணங் கடந்து
அறியப்பெறும் நிலை ஒன்றும் அவற்றுடன் கூடி அறியப்படும் நிலை
ஒன்றும் குறித்தவாறு. “உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை
யொழிவின்றி யுருவின்கண், அணையு மைம்பொறி யளவினு மெளிவர
அருளினை” (திருஞான - புரா - 161).
“அம்பலத்தாடும்
துரியவதிகார சிவனான முழுமுதல்வன்,-
உலகெலாமுணர்ந்
தோதற்கரிய சொரூபசிவமாயும்,
அலகில்
சோதி மயமான இலயசிவனாயும், நிலவுலாவிய
நீர்மலி
வேணியுடைய போகசிவனாயும் நின்றானாதலின், யாம் இவ்
வருட் காவிய விலக்கிய மினிது முடிதற் பொருட்டு அவன்
மலர்சிலம்படியினை வாழ்த்தி வணங்குவோம்” என்பது சபாபதி
நாவலர் அவர்கள் பொழிப்புரை - (திராவிடப் பிரகாசிகை).
அடியார்களது
குவிந்த உள்ளக் கமலங்களை மலர்த்தும் திருவடி
என்றலுமாம். மலர் சிலம்பு - மலர்அடி -
வினைத்தொகை;
சித்அசித்-பிரபஞ்சமெங்கும் மலர்கின்ற அடி; சிலம்பு - ஆரணநூபுரம்
என்னும் வேதக் கழல்; சிலம்புதலிற் சிலம்பெனப்படும். சிலம்பு
நாதத்தின் மூலம்தான் இருக்கும் இடமாகிய திருவடியை உணர்த்தி
உயிர்களை வந்து அடையும்படி அழைக்கும் குறிப்பு. கழறிற்றறிவார்
நாயனார்க்குத் தினந்தோறும் பூசை முடிவிலே “பூசைக் கமர்ந்த
பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலி யளித்”தமை காண்க.
“திருச்சிலம்போசை யொலி வழியே சென்று, நிருத்தனைக்
கும்பிடென் றுந்தீபற”எனும் திருவாக்கும் காண்க.
வாழ்த்துதல்
- நாம் வாழும் பொருட்டு. “வாழ்த்துவதும்
வானவர்கள் தாம் வாழ்வான்” என்பது திருவாசகம். “நமச்சிவாய
வா அழ்க”முதலிய திருவாக்குக்களும், திருப்பல்லாண்டு முதலிய
அருட்பாக்களும் இக்கருத்தே பற்றியன.
“வணங்குவாம்”
என்றதனால் வணக்கமும், “வாழ்த்தி”
என்றதனால் வாழ்த்தும், “மலர்சிலம்பு அடி” என்றதனால்
அத்திருவடிகளை எக்காலத்தும் மனத்தே பதித்த அடியார்களது
அடிமைத் திறத்தைக் கூறுவது இந்நூல் என்று குறிப்பதாகிய
வருபொருளுரைத்தலும் பெற்றாம். “இங்ஙனம்
ஞான முதலிய
நான்கு நெறியினு மொழுகி வழிபடற்குரிய சொரூபமும்;
நிட்களமும் - நிட்கள சகளமும் - சகளமு மென்று
நான்குமிதன்கட் பொருந்தி விளங்கக் கொண் டாசிரியர் மங்கலங்
கூறியருளியது, தாம் பாடவெடுத்துக் கொண்ட செந்தமிழ்க் காவிய
விலக்கியத் தலைவரான உண்மை நாயன்மார், இந்நான்கு
திருமேனியும்பற்றி நாற்பாத நெறியினு மொழுகிப் பரமுத்தி
பதமுத்திகள் தலைக்கூடிய பெற்றிமை விளக்குதல் நோக்கி யென்க.
இங்ஙன மாகலான், இம் மங்கலத் திருப்பாட்டு வாழ்த்து வணக்கம்
அடிப்பாடாக வருபொரு டெரித்தலாயவாறு காண்க” - (திராவிடப்
பிராசிகை).
“உலகெலாம்”
என்ற திருவாக்குச் சேக்கிழார் பெருமானுக்கு
நடேசப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல். இம்முதலினையே
முதலாக வைத்துக் கொண்டு ஆசிரியர் அத்திருவருளின் வழியே
இப்புராணம் பாடி முடித்தனர். இதனைத் திருத்தொண்டர் புராண
வரலாற்றிலே உமாபதி சிவாசாரிய சுவாமிகள் விரிவாய்க்
கூறியருளியது காண்க. “அருமறை முதலினடுவிற் கடையிலன்பர்
தஞ் சிந்தையி லலர்ந்த, திருவள ரொளிசூழ் திருச்சிற் றம்பலம்”
என்ற படி இப்புராணமும் மறையே - வேதமே - யாதலால் இறைவன்
தந்ததும், பிரணவ உருவமானதுமான இம்முதலைப் புராணத்தின்
முதலாகிய இப்பாட்டிலும், “சோதி முத்தின் சிவிகை.......உய்ய
உலகெலாம்”(திருஞானசம்பந்த நாயனார் புராணம் - 216) என்ற
இடையிலும், “என்றும் இன்பம்........நிலவியுலகெலாம்” என்ற
இறுதிப்பாட்டிலும், பதித்துவைத்தனர் ஆசிரியர். அதுவேயுமன்றி
அடியார்களிடையே திருவருள் வெளிப்படும் அரிய சிற்சில
இடங்களிலும் அருமையாக வைத்துள்ளார். ஆங்காங்குக்
கண்டுகொள்க.
உலகெலாம்
என்பது பிரணவ உருவமுடையது. என்னை?
நாதத்தினின்றே பிறப்பது அகரமாதலாலும், அது எல்லா எழுத்துக்கும்
முதலானதாலும், அகரம் பெறப்பட்டது. உலகெலாம் என்றதில் முதல்
உகரமும், இறுதி மகர ஒற்றும் ஆக அகர உகர மகரங்களாகிய
வியட்டிப் பிரணவ உருவம் இப்புராணத்திருமுறையாம்.
ஓங்காரத்திலே
“தோடுடைய என்று தொடங்கிய தமிழ்
வேதம்
“நிலவி உலகெலாம்” என்றதில் உள்ள மகர ஒற்றுடன் (ம்) கூடித்,
தேவார முதற் பெரிய
புராண மிறுதியாக உள்ள சைவத் திருமுறை
பன்னிரண்டும் மறையேயாய்ப் பிரணவ உருவமுடையன என்பதும்
காண்க.
“அரியவன்
- வேணியனும் - சோதியனும் - ஆடுவானும்
ஆனான்; அவனை வணங்குவாம்” என்று வினைமுடிவு செய்க.
அரியவனாயினும் எளியவனாய்த் தன்னை விளங்கக் காட்டும்
ஒளியுடன் வெளியிலே ஆடுவான். “ஆயுநுண் பொருளாகியும்
வளியே யம்பலத்துநின் றாடுவார்” (இயற்பகை - 4) எனப் பின்னர்க்
கூறுவதும் காண்க. “ஓதி யாரும் அறிவாரில்லையோதி யுலகெலாம்,
சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான்” (தேவாரம் -
திருஞான - இந்தளம் - திருவையாறு - 7) என்ற வேதப்பிரமாணமும்
காண்க.
உலகெலாம்
- மலர் சிலம்படி என்று பொருந்தச் செய்தன,
“நாமேவு மம் முதலொ டொன்றவினை யுருபுதொக, நான்கனடி
யாதிசெய்து, நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார், நற்றமிழ்க்
கவிதழையவே” என்று திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழார்
பிள்ளைத்தமிழில் பாராட்டியதைக் காண்க. இக்
கலிவிருத்தத்தின் நான்கடியும் நாற்சீருடையவாய் ஒவ்வொரடியும்
சைவாகமங்களிலோதிய நாற்பாதங்களாகிய ஞானம், யோகம், கிரியை,
சரியை எனும் நெறிகளை விளக்குந் தன்மையவெனப் போற்றப்பட்டது. இவையே நன்னெறி,
தோழர்நெறி, மக்கள்நெறி, அடிமைநெறி என்று
கூறப்படும். ஒவ்வொரு ரடியினுமுள்ள நாற் சீர்கள் சரியை யாதி
நான்கினுமுறையே வரும் உட்பிரிவுகளைக் குறிப்பாலுணர்த்தின.
இன்னும்
இப்பாட்டினுரை விரிக்கிற் பெருகும். அறிந்தார்வாய்
கேட்டுணர்க. 1
|