10. இங்கித னாமங் கூறி னிவ்வுல கத்து முன்னாட்  
  டங்கிரு ளிரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து
                                  நின்ற
பொங்கிய விருளை யேனைப் புறவிருள் போக்கு
                                  கின்ற
செங்கதி ரவன்போ னீக்குந் திருத்தொண்டர்
                         புராண மென்பாம்.

10

     (இ-ள்.) இங்கு.....கூறின - இப்புராணத்தின் பெயர்
என்னென்று சொல்வோமாயின்; இவ்வுலகத்து....இரண்டில்
அநாதிகாலந் தொட்டு இங்குள்ள இருவேறு இருள்களுள்ளே;
ஏனை...........செங்கதிரவன்போல்
- மற்றப் புற
இருளைப்போக்குகின்ற சூரியனைப்போல; மாக்கள்.....இருளை -
மாக்களின் உயிரினிடத்தே பொருந்தி நின்ற பொங்கிய அக
இருளாகிய ஆணவத்தைப் போக்குகின்ற; திருத்தொண்டர் புராணம்
என்பாம் - திருத்தொண்டர் புராணம் என்று சொல்வோம்.

     (வி-ரை.) ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது.

     புறவிருள் போக்குகின்ற கதிரவன்போல் அகவிருளைப்
போக்கும் புராணம் என்பது கருத்து. பொருள்களைக்
காணவொட்டாமற் புறஇருள் கண்ணை மறைத்துக் கொண்டிருக்கும்.
ஆனால் பாரிசேட அளவையால்தன்னையறியும்படி காட்டி நிற்கும்.
ஆதலின் அதற்கு வேறு அடை மொழியின்றி ஏனை என்று
இலகுவிற் பிரித்துக் கூறினார். ஆனால் அகஇருளுக்குச்
சிந்தையுள்ளே - சார்ந்து - நின்ற - பொங்கிய என மூன்று
அடைமொழி கொடுத்துக் கூறினார். அது உயிர், தன்னையும்
இறைவனையும் காணவொட்டாமல் மறைத்து நிற்கின்றதேயன்றித்
தன்னையும் மறைத்துக்கொண்டு நிற்கும் வலியுடைமை பற்றி என்க.
“இருபொருளும் காட்டா திது” என்பது சாத்திரம்.

     மாக்கள - ஆணவமாகிய அக இருளில் மூடப்பட்டார்
நன்மை தீமை நாடி யறியும் அறிவு இல்லாதவராதலின் மாக்களே
ஆவர் என்பார் ஐயறிவுடையவற்றின் பெயராகிய மாக்கள் என்ற
பெயரால் கூறினார். “மாவு மாக்களு மையறிவினவே
என்பதிலக்கணம். மாக்களை மக்களாக்குந் தன்மையுடையது
இப் புராணமென்க.

     சார்ந்து - நின்ற - பொங்கிய - சார்தல் - நிற்றல் -
பொங்குதல் என மூன்றும் இருள்மலம் என்னும் ஆணவமாகிய
மூலமலத்தின் செய்கை.

     சார்தல் - அநாதியே பந்தித்தல் - சார்ந்ததன் வண்ணமாகிய
உயிர்களைத் தன்வயமாக்குவது.“ஆணவத்தோ டத்துவித மானபடி” என்ற திருவாக்கும் காண்க.

     நிற்றல் - திருவருள் வெளிப்படும் வரையில் உயிர்களுடன்
சேர்ந்து நிற்றலாம்.

     பொங்குதல் - தன் செயலைப் பல சத்திகளாலும்
செய்துகொண்டு உயிர்களைப் பிறவிகளில் மேன்மேலும் செலுத்துதல்.

     நீக்கும் - உயிரறிவை மறைக்க மாட்டாமற் செய்யும்.

     பாயிரமாகிய இப்பகுதியில் முதற்பாட்டு இறைவன்
திருமொழியும் இரண்டாவது பாட்டு அவன் துதியுமாம். மூன்றாவது
பாட்டு காப்புக் கடவுள் வணக்கமாம். நான்காவது பாட்டு நூல்
நுதலிய பொருளைக் கூறிற்று. 5, 6, 7ஆவது திருப்பாட்டுக்கள்
அவையடக்கம் கூறுவன. 8ஆவது பாட்டு நூல் செய்வித்தார்
பெயரும் அவைக் களமுங் காலமுங்கூறிற்று. 9ஆவது பாட்டு நூல்
வந்த வழியையும், 10ஆவது பாட்டு நூற்பெயரையும்,
சிந்தையிருளைப்போக்குதல் என்ற நூற்பயனையும் அறிவிப்பனவாம்.
இன்றமிழ்ச் செய்யுளாய் என்றதால் மூன்றாவது பாட்டில்
நூல்வழங்கும் எல்லை தமிழ் உலகத்தின் எல்லையே என்றுங்
கூறியபடியாம். என்பாம் - புகல்வாம் - என்ற வினைகளுக்குத்
தோன்றா எழுவாய் “சேக்கிழார்” ஆசிரியர் என நூல் செய்தாரையும்
குறித்தவாறாம்.

     “ஆக்கியோன் பெயரே வழியே எல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும்,
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே”என்பது இலக்கணம். 10