101. பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்  
  எங்கு மாகி யிருந்தவர் பூசனைக்
கங்கண் வேண்டு நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாசமஞ் சொன்ன முறைமையால்.
16

     (இ-ள்.) பொங்கும் - நிபந்தம் - (இவ்வரசன்) மேன் மேலும்
வளர்கின்ற மறை வடிவினதாகிய புற்றினை இடமாகக் கொண்டவரும்,
எங்கேயும் ஆகி வீற்றிருப்பவரும் ஆகிய வன்மீக நாதருடைய
பூசனைக்கு வேண்டிய படித்தரங்களை ஆராய்ந்துளான்...
முறைமையால் - சிவாகமங்களில் விதித்தவாறு ஆராய்ந்து
நியமித்தனன்.

     (வி-ரை.) முறைமையால் - பூசனைக்கு - நிபந்தம் -
ஆராய்ந்துளான் எனக் கூட்டி வினைமுடிபு காண்க.

     பொங்கும் மாமறைப் புற்று - இறைவனுக்கு இருப்பிடமாகித்
தனக்குள் அவனைக் காட்டிக் கொண்டிருத்தலால், புற்று
மறைவடிவை யுடையது; ஆதலின் மறைப்புற்று என்றார். “மறையே
நமது பாதுகையாம் ...“ என்பனவாதி திருவாக்குக்களின்படி மறை
இறைவனுக்கு இடமாகும். வேதம் பல சமயங்கட்கும் பொதுவாய்
அவரவர் பொருளும் விரித்தற்கிடமாயிருத்தலிற் பொங்கும் என்றார்.

     எங்கும் ஆகி இருந்தவர் - புற்றை இடம்
கொண்டாராயினும் எங்கும் ஆகி இருந்தவர் எனவும், எங்கும்
நிறைந்து இருந்தாராயினும் அன்பர்கள்மீது வைத்த கருணையினால்
அவர்கள் தம்மை வழிபடும் பொருட்டு வெளிப்படக் காணப்புற்றிலே
இடங்கொண்டு இருப்பவர் எனவும் இருவழியும் பொருள் உணர்ந்து
கொள்ளத்தக்கது. இதனால் இறைவனது சர்வ வியாபகத்தன்மை
என்ற இலக்கணம் குறிக்கப்பெற்றது.

     இருந்தவர் - “சிவ“ சத்தத்திற்கு இருத்தல் - கிடத்தல் என்று
பொருள் கொண்டு, எங்கும் இருப்பவர் - எல்லாவற்றிலும் பதிந்து
கிடப்பவர் - ஆதலின் சிவபெருமானுக்குப் பெயராயிற்று என்பர்.
இதனையே எங்கும் - ஆகி - இருந்தவர் என்றார்.

     நீதி மன்னன்
- என்று அவனது நீதியைக் “கொற்ற ஆழி“
எனும் மேற்பாட்டிலே சொல்லி, நீதி மன்னர் கடைப்பிடித்துக்
காக்கவேண்டிய சிறந்த ஒழுக்கம் சிவாலய பூசை காத்தலாகிய
இதுவே என்பார் அதனை அடுத்து இப்பாட்டிற் கூறினார். சில
பிரதிகளிற் காண்கிறபடி இப்பாட்டு அதன்மேல் உள்ளதாயின்,
விண்ணவர் வேள்விகளை இயற்றியும், புற்றிடங் கொண்டார்
பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்து வைத்தும், உள்ள அரசன்,
அதன் துணைகொண்டு, உலகநீதி செலுத்தினான் - என்று
முறைப்படுத்துக.

     புற்றிடங் கொண்டவர் - எங்குமாகி யிருந்தவர் -
என்பதைத் தனது தலைநகராகிய திருவாரூரிலே
புற்றிடங்கொண்டவரும், தனது கொற்ற ஆழி சூழும்
குவலயத்தில் எங்கும் எங்கும் கோயில் கொண்டவருமாகிய
சிவபெருமான், பூசனைக்கு நிபந்தம் ஆராய்ந்து வைத்தனர்
என்று உரைப்பதுமாம்.

     அங்கண் வேண்டும் - அங்கங்கே வேண்டப்பெறும்.
நிபந்தம்
- கட்டளைப் படித்தரம்.

     ஆராய்ந்துளான்
- ஆராய்ந்து அதன்படி நியோகித்து
வைத்தான்; ஆராய்ந்து அவ்வாராய்ச்சியிற் கண்ட துணிபின்படி
நின்றவன். உளான் - அதன்படி நின்றவன்; “கற்க...கற்றபின்,
நிற்க வதற்குத் தக“ என்பது ஆணையாகலின்.

     முன்னர் வேள்விகள் எவ்வாறு தனக்கென ஒரு
எண்ணமிலாது இயற்றினானோ, அதுபோலவே பூசனைக்கு
நிபந்தமும் வைத்தான் என்க. என்னை? இவை திருக்கோயில்களிலே
செய்யும் பரார்த்த பூசை. இவற்றால் வரும் புண்ணியம் அரசர்க்கு முண்டாயினும் இவை பிறர்பொருட்டுச் செய்வனவாம்.
அவற்றிற்கு
வேண்டிய நிபந்தனைகளை அரசர் அந்நாட்களில்
அமைத்துவைத்தது, தம் கீழ்வாழும் குடிகள் இனிது வாழும்
பொருட்டே.

“ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே“

“முன்னவனார் கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துறைத் தானே“
- இரண்டாந்தந்திரம் - 19 - திருக்கோயிலிழிவு - 3 - 4

என்ற திருமந்திரப் பிரமாணத்தான் இதன் உண்மை அறிக. நமது
தமிழ் மன்னர்கள் நியோகித்த இக்கோயிற் பூசை நிபந்தங்களை
இந்நாளிலும் நமது ஆங்கில மன்னர் காலத்து வந்தது
இக்கருத்துப்பற்றிப் போலும். ஆங்கில மன்னர் Defender of the
faith என்ற பட்டத்தைத் தாங்கி நிற்பதும் காண்க. இந்நாளில்
இந்நிபந்தங்களையும் கைப்பற்றுதல், வேறு காரியங்களுக்குப்
பயன்படுத்துதல் முதலிய செயல்களில் அரசாங்கத்தார்
முந்துகின்றனர். இவை அநீதமும், தகாத செயல்களும்,
உண்மையில் குடிமக்கட்குத் தீமை பயப்பனவுமேயாம்.

     துங்க ஆகமம் - சிவாகமங்கள். இவை இருபத்தெட்டாம்.

      சொன்ன முறைமையாவது - நித்தம், நைமித்திகம், காமியம்
என்ற மூவகையோடு, அங்கங்களையும் கூட்டி (1) நித்தியம் (2)
நித்தியாங்கம் (3) நைமித்திகம் (4) நைமித்தியாங்கம் (5) காமியம் (6)
காமித்தியாங்கம் என ஆறுவகைப்படும். காரணம் பற்றாது என்றும்
செய்வன நித்தம். நித்திய பூசை முதலியன. ஒரு நிமித்தம்பற்றிச்
செய்வன நைமித்திகம் என்பர். இவை திருவிழா முதலியன. ஒரு
குறிக்கோள், உட்கிடை, பெறும்படிச் செய்வன காமியமாம். மேலும்
இவற்றின் விரிவுகளைத் தக்கார்பாற் கேட்டுணர்ந்து கொள்க.

     மனு வேந்தன் அரசாயினான் - தோன்றினான் - (98)
காவலான் - இயற்றினான் - (99) ஆக்கினான் - (100)
ஆராய்ந்துளான் - (101) என்று இப்பாட்டுக்களில் தொடாந்து
கொண்டு பொருள் செய்க.

     ஆராய்ந்தனன் - என்பதும் பாடம்.  16