104. அளவிறொல் கலைகண் முற்றி யரும்பெறற் றந்தை
                                    மிக்க
 
  வுளமகிழ் காதல் கூர வோங்கிய குணத்தா னீடி
யிளவர சென்னுந் தன்மை யெய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று வாழுநா ளொருநாண்
                                மைந்தன்.
19

     (இ-ள்.) அளவில்...முற்றி - (மேற்கூறிய) எல்லையில்லாத
பழமையான கலைகள் எல்லாம் நிரம்பப் பெற்றவனாய்;
அரும்பெறல்...கூர - பெறலரும் தந்தையார் மனம் மகிழும் மிக்க
ஆசை வளரும்படியாக; ஓங்கிய...நீடி - மேன்மேல் வளரும்
நற்குணங்களால் நிறைந்தவனாய்; இளவரசு...ஆகி - இளவரசனாம்
தகுதியை அடையும் பக்குவம் உடையவனாகி; வளர்...மைந்தன்
- ஒளிவளர்கின்ற உதய சூரியன்போன்று வாழ்கிற அந்நாள்களில்
ஒருநாள் அம்மைந்தனானவன் -

     (வி-ரை.) இப்பாட்டில் வரும் மைந்தன் என்னும் எழுவாய்
வரும்பாட்டிற் போந்தான் என்னும் வினைமுற்றோடு முடிந்தது.

     அளவில் தொல் கலைகள் - மேற்கூறிய தெய்வக்கலைகளும்
தொழிற் கலைகளும்.

     முற்றி
- மேலே கூறியபடி ஓதியும் கற்றும் நிறைவை
அடைந்து, இளவரசராய் நிற்கும் தகுதிபெற முற்றி என்க.

     அருள் பெறல் தந்தை
- மேல் 17-ம் பாட்டில் “தவத்தால்“
என்பதற்கேற்பக் கூறினார். தந்தையும் மைந்தனும் ஒருவர்க்கொருவர்
செய்தபேறு இவ்வாறு குறிக்கப்பெற்றது.

     “இவன்றந்தை யென்னோற்றான் கொல்...“ என்ற திருக்குறளும்
இங்கு வைத்துக் காண்க.

     காதல் கூர - குணத்தால் நீடி - குணம் நீடுதலால் காதல்
கூர்ந்து மிக்கது - எனக் காரண காரியமாகக் கொள்க. நீடுதல் -
காரணம். மிகுதல் - காரியம்.

     இளவர சென்னுந் தன்மை - இளவரசென்பது அரசனுக்கு
அடுத்த நிலையில் ஆட்சிக் குரியதொரு பதவி. அரசு தாங்குதற்குரிய
எல்லாத் தன்மைகளும் நிரம்பப்பெற்ற பின்னரே இளவரசு என்கிற
பதவி வழங்கப்பெறும். கண்ணப்ப நாயனார் புராணம்,

“... அடற்சிலை ஆண்மை முற்றக் கற்றனன் ...“ (41)

“வண்ண வெஞ்சிலையும் மற்றப் படைகளும் மலரக்
                                    கற்றுக்
கண்ணகன் சாயல்பொங்கக் கலைவளர் திங்க
                                  ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி யெத்தினார் ...“
(42)

என்ற திருப்பாட்டுக்களையும், அப்பருவத்தே அவர்க்கு நாகன்
பட்டம் சூட்டுதலையும் இங்கு நினைவு கூர்க. இளவரசுக்குரிய
பருவம் விதிக்கப்பெற்றதும் காண்க.

     வளரிளம் பரிதி - சந்திரனை உவமித்தால், அவன் ஒருகாற்
குறைவன் - ஒருகால் மிகுவன் - ஆதலின் இளம்பரிதிபோன்று
என்றார். மேலும் இம்மைந்தன் “துன்னு வெங்கதிரோன்
வழித்தோன்றல்“ என்று முன்னர்க் கூறியபடி, சூரிய மரபில்
முளைத்தவன் ஆதலும் குறிக்கப் பெற்றதாம். இளம்பரிதி - உதய
ஞாயிறு.

     வளர் - வளர்தற்கு ஒளி என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.
“சேய இளம் பரிதியென“ என்ற திருவிளையாடற் புராணமும் காண்க.

     ஒருநாள் - அவன் வாழ்நாளில் இது ஒப்பற்ற ஒரு தனித்த
நாளாயிற்று என்க.   19