105. திங்கள்வெண் கவிகை மன்னன் றிருவளர் கோயி
                                  னின்று
 
  மங்குறோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்து குங்குமங் குலவு
                               தோளான்
பொங்கி தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து
                              போந்தான்.
20

     (இ-ள்.) கொங்கலர்...தோளான் - மணம் பொருந்திய
பூமாலைகளைச் சாத்திக் கலவைச் சாந்தை அணிந்த தோள்களை
யுடையவனாகி; மங்குல் ... சூழ - மேகங்கள் படியும்படி உயர்ந்த
மாடங்களையுடைய அரசவீதியிலே ஏனைய அரசிளங்குமரர்கள்
தன்னைச் சூழ்ந்து வரவும்; பொங்கிய தானை சூழ - ஆரவாரம்
மிகுந்த சேனை சூழ்ந்து வரவும்; திங்கள்...நின்று - சந்திரன்போன்ற
வெண் கொற்றக் குடையையுடைய அரசரது அரண்மனையினின்றும்
புறப்பட்டு; தேர்...போந்தான் - தேரின்மேலேறி விளக்கமெய்திச்
சென்றான்.

     (வி-ரை.) திங்கள் வெண்கவிகை - மதிக்குடை -
மதிபோன்ற குடை. வெண் கொற்றக் குடை என்பர். அரசர்க்குரிய
பத்து அங்கங்களில் (தசாங்கம்) ஒன்று என்பர். வறுமை, கொடுமை,
பிறவி முதலிய வெப்பங்களின் நீக்கித் தன் ஆணை நிழலின்கீழ்
வையகத்தைக் குளிர்விப்பதால் அரசன் குடைக்குச் சந்திரனையே
உவமான மாக்குவர்.

     கவிகை - கவிக்கப் பெறுவது; குடை. இவ்வரசன் ஞாயிற்று
மரபினன் ஆதலின் அவ்வொளியைத் தான் பெற்று விளங்க மேலே
மதி கவிந்தது போல - என்ற குறிப்பும் பெறுமாறு “திங்கள் வெண்
கவிகை“ என்றார்.

     திருவளர் கோயில் - அரண்மனை. உலகத்திலே திருவை
வளர்க்கின்ற காரணத்தாலே திருவளர் கோயில் என்றார். வளர்
திருக்கோயில் என்று கொண்டு தன்னிடத்திலே வளர்கின்ற
திருவையுடைய கோயில் என்றலுமாம். அறநெறி வழாமல் புல்லியும்
மறங்கடிந்தும் வையகம் காத்தலினாலும், புற்றிடங் கொண்டார் பூசை
நிபந்தம் ஆராய்ந்தது முதலிய சிவதருமத்தாலும், அரசன்
அரண்மனையானது திரு என்றும் நீங்காது வளரும் கோயிலாயிற்று.

     மங்குல் தோய் மாடம் - மேகங்கள் தவழுமாறு உயர்ந்த
மாடங்கள். இது உயர்வு நவிற்சியணி.

“தண்டாமரை மலராளுறை தவளந் நெடுமாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே“

என்ற திருஞானசம்பந்த நாயனார் தேவாரம் காண்க.

     மன்னிளங் குமரர் சூழ - “சுற்றுமன்னர் திறை கடை
சூழ்ந்திட“ என முன்னர்த் தந்தையைக் கூறியதற் கேற்ப, இங்கு
அரச மைந்தனை “மன்னிளங் குமரர்
சூழ“ என்றுரைத்தார்.
குங்குமங் குலவு தோளானை அடுத்துச் சூழ்ந்தார் மன்னிளங்குமரர்
என்பார் அவர்களை முன்னேயும், அவ்விரு திறத்தாரையும் சூழ்ந்தன
சேனை என்பார் தானைகளைப் பின்னேயும் கூறினார் என்க.
இவர்களுக்கிடையே அரசகுமாரன் விளங்குவதைப் பாட்டுப்
போக்கிலும் இவ்வாறு வைத்துக் கூறியது காண்க.

     பொங்கிய தானை
- சேனையின் மகிழ்ச்சிமிக்க
ஆரவாரத்தைப் பொங்கிய என்றார்.

     தோளான் - தோளானாகி. தேர்மிசை - மாடவீதியில்
அரசிளங்குமரன் உலாப் போந்தான் ஆதலின் தேர்மிசைப்
போந்தான் என்றார்.

     மாடவீதி என்றும், இளங்குமரரும் தானையும் சூழ என்றும்,
தேர்மிசை என்றும், கூறிய பொருள்களின் உட்கிடையைப் பின்னர்
“வளவ நின்புதல்வன்“ எனும் 116-ம் திருப்பாட்டின் கீழ்க் காண்க.

     மைந்தன் - சூழ - சூழ - தோளான் (ஆகித்) தேர்மிசை -
மாடவீதி - போந்தான் என்க.

மாலை தாழ்ந்த - என்பதும் பாடம்.  20