106. பரசுவந் தியர்முன் சூதர் மாகத ரொருபாற்
                                  பாங்கர்
 
  விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை
                          யொருபான் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி
                         யொருபால் வென்றி
அரசிளங் குமரன் போது மணிமணி மாட வீதி.
21

     (இ-ள்.) பரசு...முழங்கொலி ஒருபால் - தனது புகழ்
பரவிக்கொண்டு வரும் வந்தியர்கள் முன்னும், சூதர்கள், மாகதர்கள்
(ஆகிய இவர்கள்) ஒருபக்கமுமாக வரவும், தாம் அணிந்த
வெள்வளைகளைச் சிந்தும் பெண்கள் ஒருபக்கம் வரவும்; முழங்கி
ஒலிக்குமாறு முரசும் சங்கமும் ஒலிப்பவர் ஒருபக்கம் வரவும்;
வென்றி. வீதி - வெற்றி பொருந்திய அரசனது இளங்குமரன் அழகிய
மணிமாடவீதியில் உலாப் போகின்றான்.

     (வி-ரை.) பரசுதல் - புகழ்களைப் பாடிவருதல். இதனைச்
சூதர் மாகதர்களோடும் தனித்தனி கூட்டுக. வந்தியர் - மங்கலப்
பாட்டுக்களினால் வந்திப் போர் - பாணர் - என்பர். வந்தித்தலாலே
வந்தியர் என்பர். சூதர் - அவ்வப்போது செய்யும் செயல்களைப்
பற்றிக் கட்டியங்கூறுவோரும், அரசனைத், தொன்றுதொட்டுத்
துயிலெழுப்புங் காலத்தும் பிற சமயங்களினும் பாடுவோரும். இவர்கள்
நின்றேத்துவோர். மாகதர் - அரசனது வீரச் செயல்களைப் புகழ்ந்து
பாடுவோர் இவர்கள் இருந்தேத்துவோர்.

     வெள்வளை சிந்துங் குழலார் என்று கூட்டிப் பொருளுரைக்க.
குழலார் வெள்வளை சிந்துதல் - இவ்வரசர் போன்ற நாயகனை
நாம் அடைவோமோ என்று மனம் வருந்த, அதனால் மேனி
இளைத்தல். “கண் களங்கஞ் செய்யக் கைவளை சோர...“
பொன்வண்ணத்தந்தாதி 3-வது பாட்டு. “ஏர்பரந்தவின வெள்வளை
சோரவென் னுள்ளங் கவர் கள்வன்“ (திருஞா - நட்டபாடை- பிரம
புரம் - 3). உத்தம நாயகன் உலாவருங் காலத்து இவ்வாறு மகளிர்க்கு
நிகழும் மெய்ப்பாடு கூறுதல் இலக்கிய வழக்காதலின் இஃது இங்குக்
கூறப்பட்டது என்க. “...நெறிபல வார்குழலார் மெலிவுற்ற
நெடுந்தெருவிற், செறிபல வெள்வளை போயின தாயர்கள்தேடுவரே“
(பதினொ - திருமுறை - பட்டினத்தடிகள் - திருவேகம்ப -
திருவந்தாதி - 53.) வெள்வளை - சங்குகளினாற் செய்த வளைகள்.
“சங்கமரும் முன்கைத் தடமுலையார் மேலெய்வான்“ என்ற
ஞானவுலாவுங் காண்க. குழலார் - நாடகப் பெண்களென்று
கூறுவாரு முளர்.

     ஆர்ப்ப முழங்கு ஒலி - ஆர்த்ததனால் எழுந்த
ஒலித்தொகுதி. ஒலிப்பவர் - வருவிக்கப்பட்டது. வென்றி -
அரசனுடைய வெற்றி. “கொற்ற ஆழி குவலயம்
சூழ்ந்திட“ என்று
மேலே கூறியதற்கேற்ப வென்றி என்றார். போதும் - இதனைப்
பெயரெச்சமாக்கி - போந்த வீதியில் இவையிவை யிருந்தன -
என்றும் கூறுவர்.

     குமரன் - பாலியம், யௌவனம், கௌமாரம், வார்த்திகம்
என்னும் பருவம் நான்கிலே இளங் கௌமாரப் பருவ மடைந்தவர்
என்க.

     வந்திகண்; வந்திகர் - என்பனவும் பாடங்கள்.  21