108. அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடு
                                 போகிச்
 
  செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற்
                          செல்லப் பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்
                                 தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று
                                 வீழும்.
23

     (இ-ள்.) அம்...கண்டு - (மேலே சொல்லியவாறு துள்ளிப்
போந்த) பசுவின் இளங்கன்று ஒரு அபாயம் நேரத்தக்க வகையிலே
குறுக்கே செல்லவே, தேரினது பொற்சக்கரம் தன்மேல் வேகமாக
ஊரப்பட்டு விண்ணுலகை அடைந்தது. அதனைக் கண்டு; அங்கு
உருகு ... வீழும் - அங்கே மிக மன உருக்கத்தை அடைந்த அதன்
தாய்ப்பசு வெம்பிற்று - அலறிற்று - சோர்ந்தது - உடம்பு நடுநடுங்கி
வீழ்ந்தது.

     (வி-ரை.) அம் - புனிற்று ஆவின் கன்று - அம் - அழகிய.
இது கன்றுக்கு அடைமொழி. மேற்பாட்டிலே “வண்ணம் நல் புனிற்று
இளம்“ என்று கூறியதற்கேற்ப இங்கும் அம் என்றார். காண்பார்
யார்க்கும் அதன் அழகும் வண்ணமுமே கண்ணுக்கு முன் தோன்றி
அதனிடத்திலே இரக்கம் மிகுதி உண்டாக்குதலின் அதனையே
வற்புறுத்திக் கூறினார்.

     ஓர் அபாயத்தின் ஊடுபோகி - தேர்க்கால் செல்லும்
வழியினின்றும் விலகிப் போகாது அதனுட்படுமாறு அபாயத்தினுள்ளே
புக்கதனால்.

     தேர்க்கால்மீது செல்லப் பட்டே - தேரினது சக்கரம்
அதன்மேலே ஊரப்பட்டு, அதனால் (இறந்து) பட்டு.
     

     உம்பரின் அடைதல்
- இறந்து படுதல். அமங்கலம்பட,
இறந்தது - என்னாது மங்கல வழக்கினாற் கூறினார்.சிவலோகப்
பிராப்தி யடைந்தார் என்று எழுதும் மங்கல வழக்கு இன்றும்
காண்கிறோம். இங்குக் கன்றாக வந்தது “இயமனே“ என்பர். கன்று
தனது உம்பருலகமாகிய இயமலோகம் சேர்ந்தது என்ற சுவைக்
குறிப்பும் காண்க.

“ஈசன் பசுவாகி யேமனொரு கன்றாகி
வீசு புகழாரூர் வீதிவந்தா ரம்மானை;
வீசு புகழாரூர் வீதிவந்தா ராமாயின்
காசளவு பாலும் கறக்குமோ வம்மானை;
கன்றையுதை காலி கறக்குமோ வம்மானை“

என்று பின்னாட் புலவர் உருசிபெறப் பாடியிருத்தலும் காண்க.

     உருகு தாய்
- கன்றை நினைந்தே உருகும் தலையீற்றுப்பசு.
“... கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே ...“ -
திருவாசகம். “கன்றகல் புனிற்றாப் போல்வர்“ என்று கண்ணப்ப
நாயனார் புராணத்திலே விளக்குவதுபோல், சிறிதுநேரம்
பிரிந்திருத்தல்கூடத் தாங்கமாட்டது துன்பப்படும் தலையீற்றுப் பசு,
தன் கன்றினை இழக்க நேரிட்ட காலத்துச், சொல்ல இயலாதபடி
மிகவும் துன்பம் அடையும் - என்பது காட்டுவார் உருகு தாய் என்று
அடைமொழி புணர்த்திக் கூறினார்.

     கண்டு
- ஈன்றணிமைத்தாகிய கன்றைத் தனது கண்மறையவும்
பொறுத்து அறியாததாகிய தாய்ப்பசு, என்றுங்காணாத இந்நிலையைக்
கண்டால் அடையும் துன்பத்திற்கு அளவில்லை என்பது குறிக்கக்
கண்டு என்றார். உருகுவது மனத்தின் தொழில்; அலமருதல் -
ஓடுதல் - வெம்புதல் - மெய்ந்நடுங்கி வீழ்தல்
- இத்தனை
செய்கைகளும் மனத்துன்பத்தினால் உளவாகி, அதனைப் புறத்தே
விளக்கின. அலமருதல் முதல் வீழ்தல் ஈறாக ஒன்றின்மேல் ஒன்றாய்
மேன்மேல் துன்பம் அடர அடர விளைந்து சகியாது இறுதியில்
வீழ்தலுடன் முடிந்தது - என்ற வைப்புமுறைப்பாட்டை நோக்குக.
மனதின் உள்ளன்பு காரணமாக நிகழும் நிகழ்ச்சி, அதன்
எடுத்துக்காட்டாகப் புறத்தே மெய்ப்பாடுகளை விளைத்தேவிடும்.
இவைகளே உள் அன்பினைக் காட்டும் அடையாளங்களாம்.
“அன்பிற்கு முண்டோ அடைக்குந் தாழ்“ என்பது திருக்குறள்.
அங்கு
- அவ்விடத்தே.

     செல்லத்தான்பட்டு - செல்லப்பட்டங்கு
- என்பனவும்
பாடங்கள்.  23