109. |
மற்றது
கண்டு மைந்தன் “வந்ததிங் கபாய“
மென்று
|
|
|
சொற்றடு
மாறி நெஞ்சிற் றுயருழந் தறிவ ழிந்து
“பெற்றமுங் கன்று மின்றெ னுணர்வெனும்
பெருமை
மாளச்
செற்றவென் செய்கே“ னென்று தேரினின் றிழிந்து
வீழ்ந்தான். |
24 |
(இ-ள்.)
மற்றது....அறிவழிந்து - மேலே கூறியபடி நிகழ்ந்த
அதனை அரசகுமாரன் கண்டு இங்கு அபாயம் வந்துவிட்டது என்று
உரைகுளறி மனத்துன்பமடைந்து அறிவையிழந்து; பெற்றமும்...என்று -
“இன்று பசுவும் கன்றும் எனது உணர்வாகிய பெருமையை அடியோடு
அழியும்படி செய்துவிட்டனவே! இதற்கு நான் என்செய வல்லேன்“
என்று சொல்லிக்கொண்டே; தேரில்...வீழ்ந்தான் - தேரிலிருந்தும்
இறங்கி வீழ்ந்தனன்.
(வி-ரை.)
மற்ற அது - மற்று - வினைமாற்றின் கண்
வந்தது;
நெஞ்சில் துயருழந்து
- கட்பொறி ஒருபுலனை அறிகின்றவழி
நெஞ்சம் அப்புலனை ஒற்றித்து நின்று அறியும். அவ்வறிவு
முறையானே உயிரறிவுக்கு விடயமாகும்;
அவ்வுயிரறிவு கலக்க வாக்கு
முதலியவற்றின் றொழிலும் மெய்ப்பாடுகளும் நிகழும்.
இந்நிகழ்ச்சிகளை விரைவுபற்றி, ‘கண்டு.......வந்தது இங்கு அபாயம்
என்று சொல் தடுமாறி' என்றார்.
வந்தது இங்கு அபாயம்
- அபாயம் வந்தது என்னாது,
வந்தது அபாயம் என்றமையே சொல் தடுமாற்றத்தைக் குறிப்பதாம்.
உள்ளப்பதைபதைப்புக் காரணத்தால், பின்னே வரவேண்டிய வினை
முன்னும், விவரணம் பின்னும் வந்தன. கீழ் வீழ்ந்து கை ஒடிந்தவன்
- ஒடிந்தது கை என்று அரற்றுதல் போல.
பெற்றமும் கன்றும் - பெற்றம் - பசு.
முன்னே புகுந்து
இறந்தது கன்றேயாகவும் இதன் பெருந் துன்பத்துக்கும் பழிக்கும்
பசுவின் பெருமையே நிலைக்களமாதலின் பெற்றத்தை முன்னே
வைத்தார்.
உணர்வெனும் பெருமை மாளச் செற்ற - உணர்வாகிய
பெருமை. உணர்வாவது சிவக்கலையும் பலகலையும் திருந்த ஓதி
முற்றியதால் வினைமுயற்சியின் விளைந்த பிறவியும்
பயனுடையதேயாம் என்று தெரிய உணர்தல். அதன் பெருமை -
சிவத்தை அடைய நிகழ்ந்த இப்பிறப்பின் பெருமையை எண்ணி
மகிழ்ந்திருத்தல்.
மாளச்செற்ற -
இவ்வுணர்ச்சியை முழுதும் அழித்து வினை
காரணமாய் வந்த இப்பிறவி மேலும் பெரும்பாவத்துக்கே
காரணமாயிற்று என்ற சிறுமையையூட்டும் உணர்வாக மாறின;
சிவனை அடைவதற்குப் பயன்படாது, இப்பிறவி, சிவபிரானுக்கு
உகந்த பெருமையுடைய பசுவின் துன்பத்திற்குக் காரணமாயது எனும்
சிறுமை உணர்வாக வந்ததையே குறிக்கப் பெருமை மாள என்றார்.
செற்ற -
பசு அடையும் துன்பத்தாலும், கன்று இறந்துபட்ட
செயலினாலும், இவ்வாறு செறுதலினால் செற்ற என்று பன்மையிற்
கூறினார். இறந்த கன்றுக்குச் செயலில்லையாயினும் அதன்
இறப்பினால் நேர்ந்த செறுதல் என்னும் விளைவை அதன் மேல்
ஏற்றிக் கூறினார். மாளச்செற்ற என்றதனால் பின் சரித நிகழ்ச்சிக்
குறிப்பும் பெறப்பட்டதாம். இவ்வாறன்றி, உணர்வெனும் பெருமை
மாள - என்பதற்குப் பசுவுக்கும் தனக்கும் உணர்வு (அறிவு)ஒன்றில்
மட்டும் உள்ள பேதமானது இங்கு உணர்வு எனும் பெருமை
அறிவாகிய பேதம் - உணர்ச்சியின்றிச் செய்த இக்காரியத்தினால்
நீங்க என்று முரைப்பர்.
இழிந்து - கீழே இறங்கி
- இழிவை யடைந்தவனாய் என்று
உரைத்தலுமாம். பொலிந்து போந்தானாகிய (105) வென்றி
அரசிளங்குமரன் இச்செயலினால் இழிந்து வீழ்ந்தான் என -
இச்செயலின் இழிபை எடுத்துக் கூறியவாறுமாம்.
வீழ்ந்தான்
- நிற்க மாட்டாதவனாய் வீழ்ந்தனன். பசு
வீழ்ந்தது போலவே இதுவும் துன்பமிகுதியால் நிகழ்ந்தது. 24
|
|
|
|