111.
|
வந்தவிப்
பழியை மாற்றும் வகையினை மறைநூல்
வாய்மை |
|
|
அந்தணர்
விதித்த வாற்றா லாற்றுவ தறமே
யாகில்
எந்தையீ தறியா முன்ன மியற்றுவ னென்று
மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான் றிருமறை யவர்முன்
சென்றான். |
26 |
(இ-ள்.)
வந்த...இயற்றுவன் என்று - இவ்வாறு வந்துபுகுந்த
இப்பழியை மாற்றும் வகையை வேதம் முதலிய நூல்களும்,
அவற்றின்படி ஒழுகும் வாய்மை அந்தணர்களும் விதிக்கின்றபடி
செய்வது தருமமாயிருக்குமானால் எனது தந்தை இதனைத்
தெரிவதற்கு முன்னமே அது செய்து முடிப்பன் - என்று துணிந்து;
மைந்தன்...சென்றான் - அரசகுமாரன் மனத்தின் மிகுந்த
வருத்தத்தைத் தீர்க்கும்படி அந்தணர்களிடம் போயினான்.
(வி-ரை.)
வந்த இப்பழி - மேற்பாட்டிலே ‘வந்தெய்த'
என்றதையே தொடர்ந்து கொண்டதாம். உரை அங்குக் காண்க.
மறைநூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் -
வேதங்களும் அவற்றின் அங்கமாகிய நீதிநூல் முதலியவும்,
அவற்றின் வழியே ஒழுகி அவற்றின் உண்மையை எடுத்துக் கூறும் அந்தணர்களும், விதிக்கின்றபடி.
அந்தணர் - எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோர். பிறிதொரு உயிர்க்கு வந்த
துன்பத்தைப் போக்கும் வழி அவ்வுயிர்களிடத்தே செவ்விய
தண்ணளிபூண்டு ஒழுகுபவர்க்கே கைவருமாதலால் அந்தணர்
என்றார். பின்னர், அரசன், அவர்கள் அந்தணர்கள் ஆகாது
மறையவர்களே ஆகி நின்றார்கள் - என்று முடித்துக்காட்டும்
குறிப்புப் பெறும் பொருட்டுப் பின்னர் “மறையவர் முன்“ - என்றார்.
நூலும் அந்தணரும் விதித்த - உம்மை விரிக்க.
அறமேயாகில்
- அவ்வாறு விதித்தபடி மாற்றும்வகை
செய்வது அறமாகுமோ? தீர்வுமாகுமோ? என்று ஐயப்பட்டானாதலின்
அறமேயாகில் என்றான். ஆகில் - இது அறநூல்
சம்மதிக்குமாகில்,
நூலின்படி அந்தணர்விதிப்பாராகில் அது கொண்டு இப்பழி
தீருமாகில் - என்க.
மாற்றும் வகை - அறநூல் விதிவழி செய்யும்
கழுவாய்.
இதனைப் பிராயச் சித்தம் என்பர். பசுக் கொலைக்குக் கழுவாய்,
இறந்த பசுவின் தோலைப் போர்த்துக் கொண்டு, ஒருவேளை உணவு
உண்டு, அப்பசு மந்தையில் ஆறு மாதம் வாசம் செய்து, அப்பசுக்
கூட்டத்தைக் காப்பாற்றி வருதல் என்பர்.
அறியா முன்னம் இயற்றுவன்
- அரசன் அறிந்தால்
வருந்துவன் ஆதலின் அவ்வருத்தம் நிகழாதிருக்க முன்னம்
என்றான். அன்றியும் அவன் அறிந்தபின் தீர்வு தேடிச் செய்தற்குக்
காலம் நீடிக்குமாதலின், காலமும் பழியும் நீடிக்காதிருக்கும்
பொருட்டு முன்னம் என்றான் என்றலுமாம்.
மறையவர் முன் சென்றான் - தானே தெய்வக்கலை
பல
திருந்த ஓதியவனாயினும் அறிவழிந்து வீழ்ந்தமையாலும், தன்காரியமே
யாதலின் பிறர் சொன்னபடி நிற்றலே பழிநிகழாது காக்கக்
காரணமாகின்றமையாலும், மறையோர் முன் சென்றான்.
துயரம் -
மேலே குறித்தபடி தன் மனத் துயரமும்,
அரசனறிந்தால் அவனுக்குளதாம் துயரமும். தீர்ப்பான்
- தீர்ப்பதற்கு
வினையெச்சம். 26
|
|
|
|