115. மன்னவ னதனைக் கேளா வருந்திய பசுவை
                                 நோக்கி
 
  என்னிதற் குற்ற தென்பா னமைச்சரை யிகழ்ந்து
                                 நோக்க
முன்னுற நிகழ்ந்த வெல்லா மறிந்துளான் முதிர்ந்த
                                கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன் றாளிணை
                        தொழுதுசொல்வான்.
30

     (இ-ள்.) மன்னவன்...நோக்க - அரசன் காவலாளர்
சொன்னதைக் கேட்டும், தன்முன்னர் வருந்தி நின்ற பசுவை
நோக்கியும், அதன் பின்னர் இதற்கு என்ன நேர்ந்தது என்று
கேட்டு அறியும் விருப்பத்தாலே அங்கு நின்ற அமைச்சர்களை
இகழ்ச்சியோடு நோக்கினான். அவ்வாறு நோக்க;
முன்னுற.....சொல்வான் - முன்னமே இந்நிகழ்ச்சி முழுவதும்
அறிந்தவனாகிய தொன்னெறி அமைச்சன் அரசனை வணங்கிப்
பின்வருமாறு சொல்வானாயினன்.


     (வி-ரை.) மன்னன் - கேளா - நோக்கி - நோக்க -
அமைச்சன் சொல்வான் என்க.

     வருந்திய பசு - வாயிற் காவலர் பசுவின் துயரத்தையும் அது
மணியடித்த காரணத்தையும் அறியாராய் ஒரு பசு துளக்கியது
என்றாராயினும், அரசன், அப்பசு “தரியாதாகி - நெருப்புயிர்த்து -
விம்மிக் - கண்ணீர்வார “ நின்றமை கண்டு, அதன் துன்பத்தை
உணர்ந்தானாதலின் “வருந்திய பசுவை நோக்கி“ என்றார். பசுவை
நோக்கியும் அதன் வருத்தத்தை நோக்க வலியில்லாத வாயிற்
காவலர் முன்பாட்டிலே ஓர் பசு என்று அடைமொழியில்லாது
கூறியதும், இப்பாட்டிலே வருந்திய பசு என்று கூறியதும்
உய்த்துணரத்தக்கன.

     என்னிதற்குற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க -
கண்ணீரின் மூலம் பசுவின் வருத்தத்தையும், மணியடித்ததின் மூலம்
அநீதம் நிகழ்ந்தது என்பதையும், அறிந்த அரசன் அநீதம்
நிகழ்ந்தபின் காரணந் தெரியவேண்டிய கடமைப்பாடும், நிகழாமுன்,
வாராமைக் காக்க வேண்டுங் கடமைப்பாடுமுடைய அமைச்சர்
இவ்விரு கடமைகளிலும் வழுவினார்கள் என்று தெரிவிக்க இகழ்ந்து
நோக்கினான் என்க. அந்தநோக்கம் இகழ்ச்சியைத் தெரிவித்ததன்றிக்
காரணத்தை விசாரித்தது ஆம். “கண்ணிற் சொலிச்செவியி னோக்கும்
இறைமாட்சி“ என்ற இலக்கணமுங் காண்க. கண்ணிற் சொல்லுதல்
இங்கு இகழ்ந்த நோக்கத்தாற் பெற்றாம். செவியின் நோக்கினமை
மேலே மணியோசை கொண்டு அநீத நிகழ்ச்சியை அறிந்தமையாற்
பெறப்படும்.

     அமைச்சர் - மந்திரத் தொழில் செய்வோர். அமாத்தியர்
என்பது வடமொழி. அருகிருப்பவர் - என்பது பொருளாம்.
உயிரறிதலுக்கு இந்திரியங்களும் அந்தக்கரணங்களும்
இன்றியமையாதிருத்தல்போல, அமைச்சர் அரசர்க்கு உள்ளவர்
என்பது சாத்திரம். அமைச்சரை இகழ்ந்து நோக்கி என்றமையால்
பசுவை இரங்கி நோக்கினான் என்பது பெறப்படும். அந்நோக்கம்
பின்விளையும் நிலையை 118-வது பாட்டில், “தன்னிளங் கன்று
காணாத தாய்முகங் கண்டு சோரும்“ என்பதனால் அறிக.

     முன்னுற......அமைச்சன்
- நல்லமைச்சின் இலக்கணமும்
முழுதும் அமைந்து தொன்றுதொட்டு வந்த பழநெறியில் உள்ளவன்
என்பது பொருள். அமைச்சின் இலக்கணம் திருக்குறளிற் காண்க.
நாட்டின் நடப்பு முழுதும் அவ்வப்போதே தானே யறிதலும், பிறராற்
கேட்டறிதலும் தொன்றுதொட்டுக் கைதந்த நன்னெறி ஒழுகுதலும்,
அமைச்சருக்கு இன்றியமையாத இலக்கணங்களாம்.

     முதிர்ந்த கேள்வி - எவ்வாற்றாலும் பிழைபடாத கேள்வி.
கேள்வியின் இலக்கணமும் அது முதிரும் இயல்பும் திருக்குறளிற்
“கேள்வி“, “ஒற்று“ முதலிய அதிகாரங்களிலே தெளிந்துகொள்க.
முதிர்ந்த கேள்வியுடைமை அறிவுடைமைக்குக் காரணமாயிற்று.
ஆதலின் அறிந்துளான் என்றார். கேள்வி என்றதனால் கல்வி
முன்னரே பெறப்படும். இங்கு இச்செய்தி அவன் கேட்டறிந்தது
என்பது குறிப்பு.

     தொன்னெறி அமைச்சன் - தொன்னெறி வருதலும்,
தொன்னெறி நிற்றலும், ஆகிய இரண்டு பண்பும் கொண்டவன் என்க.
அமைச்சர் பண்புகளில் இவ்விரண்டும் மிகவும் இன்றியமையாதன
ஆம்; இவையே அரசனையும் குடிகளையும் அந்நெறியில் நிற்பிப்பன
ஆதலின். நெறி - வழியும் ஒழுக்கமுமாம். இவ்வமைச்சனது
தொன்னெறிப் பண்பினை வரும்பாட்டிற் காண்க.

     என்றென்றமைச்சரை - என்பதும் பாடம்.     30