116. “வளவ! நின் புதல்வ னாங்கோர் மணிநெடுந்
                            தேர்மே லேறி
 
  அளவிறேர்த் தானை சூழ வரசுலாந் தெருவிற்
                               போங்கால்
இளையவான கன்று தேர்க்கா லிடைப்புகுந் திறந்த
                               தாகத்
தளர்வுறு மித்தாய் வந்து விளைத்ததித் தன்மை“
                               யென்றான்.
31

அரசனுக்குத் தொன்னெறி அமைச்சன் கூறியது.

     (இ-ள்.) வளவ!...போங்கால் - “அரசரே! உம்முடைய புதல்வன்
அங்கு ஒரு அழகிய பெரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு அநேகம்
தேர்ப்படைகள் தன்னைச் சூழ்ந்துவர அரசன் உலாச்செல்லும்
தெருவிலே உலாப் போகுங்காலத்தில்; இளைய...என்றான் - இளைய
பசுக்கன்று தேர்க்காலினுள்ளே புகுந்து இறந்து பட்டதென்று
அவ்வாறாகத் தளர்வுறுகின்ற இந்தத் தாய்ப்பசு இங்கே வந்து
இத்தன்மையைச் செய்தது“ என்று சொன்னான்.

     (வி-ரை.) வளவன் - சோழன். வளத்தை உடைமையின்
வளவன் எனப்பட்டான்; வளத்தன் - மாவளத்தன் - பெருமா
வளத்தன். (பட்டினப்பாலை)உலக வளவனாதலின் இத்துன்பத்தை
வேறெவரும் விளைக்க வலியிலராவர்; இது பிறரால் நேர்ந்ததன்று
என்று குறிக்க வளவ என்றார்.

     புதல்வன் - மகன். பேர் முதலிய வேறு -
அடையாளமில்லாது கூறினமையால் அரசர்க்கு ஒரே மகனென்பது
பெறப்படும். பின்னர் “ஒரு மைந்தன் தன் குலத்துக்குள்ளானென்பதும்
உணரான்“ (129) என விரித்துக் கூறுதலும் காண்க.

     இளைய ஆன்கன்று
- “இளங்கன்று பயமறியாது“ என்ற
பழமொழிப்படி தன்னியல்பின்படியே துள்ளிச்சென்று தானே தனக்கு
அபாயத்தை விளைத்துக்கொண்டது என்பது குறிப்பாம். முன்னும்
“இளங்கன்று துள்ளிப்போந்தது“ என்றார்.

     புகுந்து - தேர்க்காலுக்கும் நிலத்துக்கும் இடையிலே புகுந்து.
கன்று, தேர்க்காலினுட் புகுந்து கொண்டதேயன்றித், தேர்க்கால்
அதன்மேல் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டபடி.

     இறந்ததாகத் தளர்வுறும்
- இறந்ததென்று உட்கொண்டு
வருந்தும். பின்னர் உயிர்பெறும் கன்றாகலின், இறந்தது இறந்தே
படவில்லை; ஆயினும் இப்போதைக் காட்சிக்கு இறந்ததாய்க்
கொண்டு - என்பது குறிப்பு. ஆக - ஆதலின் என்றலுமாம்.

     இத்தன்மை - மணியடித்தது முதல் விடை சொல்லும்
அளவும் நிகழ்த்திய தன்மையுடைய செய்கை. தன்மை - இங்கு
தன்மையுடைய செய்கைக்கு ஆகுபெயர்.

     தேர்மேலேறி என்றதனால் கீழேவரும் அபாயம் தெரிந்து
விலக்க முடியாத நிலையென்றும்; தானைசூழ என்றதனால் அபாயம்
வராது காக்கப் பல காவல்களுமிருந்தன என்றும்; அரசுலாந் தெரு
என்றதனாற் பசுக்கூட்டம் செல்லுமிடமன்று என்றும்; இவ்வாறே
இப்பாட்டிற் குறித்த பொருள்கள் யாவும் இந்நிகழ்ச்சிக்கு
அரசகுமாரன் ஒரு சிறிதும் பொறுப்புடையவனன்று என்பதைத் தான்
அரசனுக்கு விடை சொல்லு முகத்தாலேயே அறிவிக்குமாறு
உட்குறிப்புக்களுடன் மந்திரி கூறினமை காண்க. இதுபற்றியே
முன்னர் இவனை “அறிந்துளான் முதிர்ந்த கேள்வித் தொன்னெறி
யமைச்சன்“ என்றார். முன்பாட்டிற்கண்ட அரசனது இகழ்ச்சி
நோக்கம் அமைச்சர் பலர் மேலும் வீழ்ந்ததாகவும், விடைசொல்வான்
தொன்னெறி அமைச்சன் ஒருவனே ஆயினன். ஆதலின் இவன்
அவருட் சிறந்தவன் என்ற குறிப்புமாம். அமைச்சுத்திறத்தின்
சிறப்புக்களெல்லாம் இவ்வமைச்சனிடத்துப் பொருந்தியிருந்ததோடு,
இவ்வாசிரியரிடத்தும் பொருந்தியிருந்தமை இங்கே உய்த்து
உணர்தற்பாலது.     31