119. மந்திரிக ளதுகண்டு மன்னவனை யடிவணங்கிச்  
  “சிந்தைதளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றாற்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதைசெய்
                              தார்க்குமறை
யந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்த லற“
                              மென்றார்.
34

     (இ-ள்.) மந்திரிகள்...வணங்கி - அரசன் அடைந்த
அளவில்லாத் துயரத்தை அமைச்சர்கள் கண்டு அவன் பேரருளை
நோக்கி வணங்கி; சிந்தை ... அறம் என்றார். “அரசே! மனம்
தளர்ந்து துயரமடைவது இதற்குத் தீர்வாகாது; (பின் என்னை?
என்பாராயின்) பசுவதை செய்தார்க்கு அந்தணர்கள் விதித்த வழியே
உமது மைந்தனை முறை செய்வதுதான் அறநெறியாகும்“ என்று
சொன்னார்கள்.


     (வி-ரை.) அது - முன் சொல்லியவாறு அரசனுற்ற
அளவில்லாத் துன்பத்தை.

     தீர்வன்றால் - முன்பாட்டிலே, அரசன் துயர் மிகுதியால்
எதுசெய்யினும் தீராது எனக் கருத்துட்கொண்டு என் செய்தால்
தீரும்? என்று, தனக்குத்தானே சொல்லிய உட்கருத்தை நோக்காது,
வினாவாகக் கொண்டு அமைச்சர் விடை சொல்லியவாறு.

     திருஞானசம்பந்தநாயனார் புராணத்திலே, ‘சுரம் நீங்கப்பெற்ற
மன்னவன் என்னவாது உமக்கு?' என்று இகழ்ந்து சொல்லும்
வாசகத்தையே வினாவாகக் கொண்டு,

“என்ன வாது செய்வதென் றுரைத்ததே
                     வினாவெனாச்
சொன்ன வாசகந் தொடங்கி ...“
(777)

என்றும்,

     அனல் வாதத்தில் அமணர் தோற்ற பின்பு “நீங்கள் தோற்றிலீர்
போலும்“ என அரசன் இகழ்ந்து கூறியபோதும்,

“தென்னவ னகையுட் கொண்டு செப்பிய மாற்றந்
                                 தேரார்
சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார்“
(794)

என்றும்,

     கூறுகின்ற சொல்லாற்றலையும், பொருள் கொள்ளும்
வகைகளையும், இங்கு வைத்துக் காண்க. ஆனால் அங்குக் கண்டது
நகைச்சுவை; இது இரக்கச்சுவை.

     கோவதை செய்தார்க்கு - இதுபோல் முற்காலத்து
நிகழ்ந்தபோது அது செய்தவர்க்கு - என்க. செய்தார்க்குத் தீர்வாக
விதித்த என்று கூட்டுக.

     கொத்து - அலர் - தார் மைந்தன் - கொத்தாகிய
மலர்களின் மாலையணிந்த மகன்.

     மறை அந்தணர்கள் விதித்த - எவ்வுயிர்க்கும் ஒப்பச்
செந்தண்மை பூண்டொழுகுபவர்கள் ஆதலின் அந்தணர் என்றார்.
இவ்வாறே 111 திருப்பாட்டிலும் அந்தணரது நினைவு அரசிளங்குமரன்
உள்ளத்து எழுந்ததும் காண்க. அவர்கள் விதிப்பதும்
தம்இச்சையாலன்றி மறைநூல் விதியின்படி விதித்தது என்பார், மறை
அந்தணர்கள் என்றார். மறைகளும் அந்தணர்களும் விதித்த
என்றலுமாம்.

     வழி நிறுத்தல்
- முறையிலே நிற்பித்தல். அறம் - தீர்வு
வேண்டி அரசன் வினாவினான் என்று உட்கொண்ட அமைச்சர்கள்
“துயரம் அடைவது இதற்குத் தீர்வு அன்று; வேறு தீர்வில்லாதபோழ்து
அறவழிநிறுத்தலே தரும இயல்பு“ என்றார்.

     தீர்வு - கழுவாய்
- பிராயச்சித்தம். இதையே மாற்றும் வகை
(111) என்றார்.

     அறத்தில் நீடும் என்னெறி நன்றால் என்று தன் அரசாட்சியை
இகழ்ந்து கூறின அரசனுக்கு அறத்தின் ஆறு இதுவே என்று
காட்டுவது அமைச்சரது கடமையாதலின் நிறுத்தல் அறமென்று
கூறினார் என்பதும் கருத்தாம். அறம் - இங்குச் செய்யத்தகுவது -
“விதித்தன செய்தல்“ என்னும் பொருளில் வந்தது. பின்னரும் (120 -
122) இதனையே வழக்கு என்றமையும் காண்க.

     இது பல அமைச்சருள்ளும், முன்பாட்டிற் கூறிய தொன்னெறி
யமைச்சன் ஒழிந்த மற்ற அமைச்சர்கள் கூறியது போலும். 34