12. அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
 
  நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.
2

     (இ-ள்.) அண்ணல்..........ஆதலின் (யாவருக்கும் மேலாம்
அளவில்லாத சீருடையானாகிய) பெருமையுடைய சிவபெருமான்
விரும்பி எழுந்தருளி என்றும் மன்னியிருக்கும் பேறுபெற்ற
மலையாதலால்;நண்ணும்.........புண்ணியம - சேர்கின்ற மூன்று
உலகங்களும் நான்கு வேதங்களும் அளவில்லாத பெருந்தவம்
செய்ததனால் நேரே கண்ணாற் காணும்படி வந்து சேர்ந்த
புண்ணியங்களானவை யாவையும்; திரண்டு உள்ளது போல்வது -
ஒருங்கு சேர்ந்து உருவெடுத்து நிலைத்ததே போன்றுள்ளதாம்
இத்திருமலை.

     (வி-ரை.) அண்ணல் - பெருமையுடையான். எல்லார்க்கும்
மேலானவனாதலால் இது சிவபெருமானையே குறிக்கும். அவன்
புண்ணியமூர்த்தியாதலால் அவன் எழுந்தருளியிருப்பதான இத்திருமலையும் புண்ணிய சொரூபமுடையது. “பூதநாயகன்
புண்ணியமூர்த்தியே
” (அப்பர்) முதலிய திருவாக்குக்கள் காண்க.

     நண்ணும் மூன்றுலகு - உயிர்கள் உலகங்களிற் புகுந்தே
தங்களது வினைகளை ஒழிக்க வேண்டியிருத்தலால் நண்ணும்
என்றார். மேல் - நடு - கீழ் - என்ற மூன்று நிலையிலும் உள்ள
உலகங்களின் பெரியோர்கள் புண்ணிய அனுபவம் மேலுலகத்திலும்,
பாவ அனுபவம் கீழுலகத்திலும் செய்யப்பட்டுக் கழிந்தபின் உயிர்கள்
நடு உலகமாகிய இந்நில உலகிற் பிறந்து சிவபுண்ணியம் செய்தே
அது காரணமாக வீடுபெறுவர் என்பது சகல சாத்திரங்களின் முடிந்த
முடிபு. ஆதலின், மேல் கீழ் உலகங்களின் தவம் நடுவுலகத்தில்
நின்றது; நடுவுலகததின் பயன் சிவபுண்ணியமாயிற்று;
சிவபுண்ணியங்களின் பயனாய்த் திருமலை நின்றது என்பது கருத்து.
நான்மறை தவம் செய்வதாவது மறைக்காடு முதலிய தலங்களில்
அருச்சித்து இறைவனைத் தமக்குள்ளே விளங்கும்படி பெறுதல்.

     வந்து எய்திய - தவம் செய்ததனால் உருவெடுத்து முன்னே
வந்து பொருந்தியது போலும். பெரியோர் வசனமும் வேத வசனமும்
பொய்யாகாமற் காட்சிப்படும்பொருட்டு அவர்கள் தவம்செய்ய
உருவுடன் ஈசன் இருக்கும் இடமாகியது.

     புண்ணியம் திரண்டு உள்ளது - புண்ணியமாவது தவத்தின் பயன். புண்ணியத்தின நிறம் வெண்மை என்பர். புண்ணியமே
உருவெடுத்தாற் போன்றுள்ளது திருமலை என்பது கருத்து.
புண்ணியத்தினிடமாக வீற்றிருப்பதுபோலவே இத்திருமலையிலும்
இறைவன் வீற்றிருக்கின்றதனால் இதற்குப் புண்ணியத் திரட்சி உவமானமாயிற்று.     2