120. “வழக்கென்று நீர்மொழிந்தான் மற்றதுதான்
                             வலிப்பட்டுக்
 
  குழக்கன்றை யிழந்தலறுங் கோவுறுநோய்
                            மருந்தாமோ?
இழக்கின்றேன் மைந்தனையென் றெல்லீருஞ்
                            சொல்லியவிச்
சழக்கின்று நானிசைந்தாற் றருமந்தான்
                            சலியாதோ?“
35

     (இ-ள்.) வழக்கென்று...மருந்தாமோ? - மறையந்தணர்கள்
விதித்த வழி மைந்தனை நிறுத்தலே இதற்குத் தீர்வாகிய வழக்கு
என்று நீங்கள் சொன்னீர்களானால், வலிந்துகொல்லப்பட்டமையால்
இளங்கன்றை இழந்து அலறுகின்ற பசுவின் துன்பத்துக்கு அது
மருந்தாகுமோ?; இழக்கின்றேன்...சலியாதோ? - பசு தன்கன்றை
இழந்தமைக்குத் தீர்வு ஆகும்படி நான் என் மகனை இழந்து
விடுகின்றேன் என்று கருதி நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லிய
இந்தத் தீமைக்கு நான் உடன்பட்டால் தரும தேவதைதான்
சலிப்படையாதோ?                               

     (வி-ரை.) வலிப்பட்டு - வலிமை - கொடுமை -
செய்யப்பட்டு அதனால் இழந்து என்று கூட்டுக. வலிப்பட்டு
மருந்தாமோ என்று கூட்டி அது குற்றந்தீர்க்கும் சததி பெற்றுப்
பசுவின் நோய்க்கு மருந்தாகுமா? என்றுரைத்தலுமாம். வலிப்பட்டு -
வருந்தி
- எனப் பொருள்கொண்டு - வலியப்பட்டு அலறும் என்று
கூட்டியும் உரைப்பர். நோய் மருந்து - நோய் தீர்க்கும் மருந்து.
நான்காம் வேற்றுமைத் தொகை; பகைமைப் பொருளில் வந்தது.
“மற்றிதற்குத் தீர்வு“ என்று அமைச்சர் சொல்லியது நோக்கி அரசன்
கூறுவதாம்.

     மைந்தனை யிழக்கின்றேன் என்று
- நான் இப்பசு
நோய்க்குத் தீர்வாக அதன் துயரத்தையே தாங்கும்பொருட்டு என்
மைந்தனை அவ்வாறே இழக்கத் துணிகின்றேன் என்று உட்கொண்டு
அதை விலக்கக் கருதி என்றபடி. அரசன் உள்ளம் செல்வழியை
அவனடைந்த துயரத்தின் மெய்ப்பாடுகளிலிருந்து மதியூகிகளாகிய
அமைச்சர் உணர்ந்தனர். அவர்களது உள்ளக் கருத்தை அவர்களது
சொல்லிலிருந்து அரசனும் உணர்ந்தான் என்க. இழக்கின்றேன்
இன்று
- என்பதும் பாடம்.


     சழக்கு - குற்றம். இங்குக் குற்றம் பொருந்திய வார்த்தை.
அறியாமை - என்றுமாம். “இச்சழக்கினின் றேற்றுவார்“ 542 காண்க.
சழக்கு - குற்றம் மலிந்த உலக பாசம். பசுவின் துன்பநோக்கி
அரசன் அளாவிலாத்துயரடைந்து சோர்ந்தபோது சிந்தை தளர்ந்தருள
வேண்டுவதில்லை எனும் குறிப்புத்தோன்ற “தளர்வது - தீர்வன்று“
என்றாராதலின் இதனைச் சழக்கு என அரசன் கொண்டனன்.

     தருமம்
- அறக் கடவுள். சலித்தல் - அசைதல். அறம்
எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரே படித்தாய் நிலைபேறு பெற்றுச்
செல்வது போய், நிலைத்தலின்றி அசைந்து வருதல். இசைந்தால -
இசையமாட்டேன் என்பது குறிப்பு.    35