| 121. | 
          “மாநிலங்கா 
            வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் | 
            | 
         
         
          |   | 
          தானதனுக் 
            கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால் 
            ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால் 
            ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ?“ | 
          36 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. (அந்த அரசியற்றருமம் தான்  
      யாதெனில்) நிலத்தின் வாழும் பல உயிர்களையும் காவல்  
      செய்யும்போது, அதற்கு இடையூறாகத் தன்னாலும், தன்  
      பரிசனங்களாலும், பகைவர்களாலும், கள்வராலும், ஏனை  
      உயிர்களாலும் வரும் ஐந்து பயங்களையும் தீர்த்துத் தருமத்தைப்  
      பிறழாமற் பாதுகாக்கின்றவன் அல்லனா மாநிலங்காவலன் என்ற  
      பெயருக்கு உரிமையுடையவன்?                       
       
           (வி-ரை.) 
      இப்பாட்டு அரசன் காவலன் எனும் தகுதிபெறும்  
      தன்மையை விளக்குவது. இதுவே எல்லா நாட்டிலும் எல்லா  
      அரசர்க்கும் எல்லாக் காலத்தும் குறிக்கோளாய் இருக்கத் தக்கது. 
       
           அரசர் கடமைகள் முற்றும் இதில் அடங்குவனவாம்.  
      அரசாங்கம் முடியரசோ - குடியரசோ - பொதுவரசோ - இன்னும்  
      புதிதாய்க் கிளம்பக்கூடிய எவ்வரசோ ஆயினும் அவையாவும்  
      இதனையே குறிக்கோளாகக் கொள்ளக்கடவன என்பது அறிஞர்  
      துணிபு. 
       
           அறங் காப்பான் அல்லனோ மாநிலங் காவலனாவான் என்று 
       
      கூட்டி முடிக்க. காப்பவனே காவலன் ஆகின்றான்; ஏனையோர்  
      அரசராயினும் காவலர் ஆகார் என்பது கருத்து. 
       
           உயிர் காக்கும் காலை அதற்கு (அக்காவலுக்கு) இடையூறாய்த் 
       
      தன்னால் - தன் பரிசனத்தால் பகைத் திறத்தால் - கள்வரால் -  
      உயிரால் - ஆன ஐந்து பயமும் தீர்த்துத்தான் காப்பான் அல்லனோ  
      காவலனாவான்? என்று கூட்டி முடிக்க. 
       
           அதனுக்கு 
      - அத்நாவலுக்கு; நிலத்துக்கு என்று  
      கூறுவாருமுளர். 
       
           இடையூறு 
      - இடையிலே உற்றுச் செல்வதைத் தடுப்பது -  
      என்பது பொருள். காவலாகிய அரச ஆணைக்கும், காக்கப்படும்  
      உயிர்களுக்கும், இடையிலே உற்று அக்காவலாணை தொடர்ந்து  
      செல்லாமல் தடுப்பது. 
       
            தன்னால் - 
      மற்ற நான்கு வகைகளாலும் வரும் இடையூற்றை  
      அரசன் தான் தீர்ப்பன். தன்னால் வரும் இடையூற்றை தீர்ப்பார்  
      பிறரின்மையின் முதலிலே வராமற் காக்கப்படுவது தன்னால்  
      நேரக்கூடிய இடையூறேயாகும் - என்ற முதன்மைபற்றித் தன்னால்  
      என்று முதலில் வைத்துக்கூறினார். தன்னால் வருவன -  
      இறைப்பொருளை மிகுதிகொள்ளுதல் - அதனை வலிந்து  
      கொள்ளுதல், கொடுக்க வகையிலாரிடம் கொள்ளுதல், அல்லவை  
      நீக்கா தொழுகுதல், காட்சிக்கரியனாதல், கடுஞ் சொல்லனாதல்,  
      இடிக்கும் துணையாயினார் சொற்களைக் கேட்கப் பொறுக்கும்  
      பண்பிலனாதல், அறநிலையப் பொருளை வவ்வுதல் முதலியன. 
       
       
      
         
          “இன்று 
            கொளற்பால நாளைக் கொளப்பொறான் 
            நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் 
            ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும் 
            வேடலன் வேந்து மலன்“ | 
         
       
       
      
         
          “ஒற்றிற் 
            றெரியா சிறைப்புறத் தோர்துமெனப் 
            பொற்றோன் துணையாத் தெரிதந்தும் - குற்றம் 
            அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை; சென்று  
            முறையிடினுங் கேளாமை யன்று“ | 
         
       
       
      முதலிய நீதிநெறி விளக்கக் 
      செய்யுட்களைக் காண்க.  
       
           தன் 
      பரிசனத்தால் - வருவன - அரசனிடம் அதிகாரம்  
      பெற்றேம் - அரசனது வலிய சார்பு பெற்றேம் . என்ற  
      இறுமாப்பினால் வரும்; இவராலாவன - நியதி மீறிய எவ்வகையான  
      மிகைச் செயல்களுமாம். 
       
           ஊனமிகு பகைத்திறத்தால் 
      - எவ்வழியிலும் அரச  
      ஆணையின் மிகுந்து மீளும் வலிமை பெற்றபோதே பகைவர்  
      இடையூறு விளைப்பர்; பகைத்திறத்தாலான பயம் - பசுக் கவர்தல் -  
      கொள்ளையிடல் - மாதர் கற்பழித்தல் முதலியன. 
       
           கள்வராலாவன - வழிப்பறி முதலியன. உயிராலாவன 
      - புலி  
      - யானை முதலியவற்றால் விளைவன. இங்கு மகனாலான பயம் -  
      பரிசனப்பயம் என்ற பகுப்பில் அடங்கும். 
       
           பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை 
       
      “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி  
      இருந்தோம்“ (கண் - புரா.) காண்க. இந்நாள் நவீனர் அரசாட்சியிலே  
      நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச் சட்டமும், குடிகளின்  
      உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே  
      குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் -  
      உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against  
      perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக  
      வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும்,  
      குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு  
      நோக்கிக் காணத்தக்கன. 
       
           ஆனபயம் - 
      மேற்சொன்னபடி உண்டான பயம். பயம்  
      ஐந்தும் - ஐந்து பயமும். 
       
           அறம் காப்போன் 
      - அரசியல் ஆணை இடையறாது  
      செல்லவேண்டியதாகிய அறநெறிக்கு இடையூறு வராமல் காவல்  
      புரிபவன். 
       
           அல்லனோ ஆவான் 
      - எனும் வினா அவனேயாவன் என்ற  
      உடன்பாட்டுத் தேற்றப் பொருளில் வந்தது. பிறர் ஆகார் என்று  
      பிரிநிலைக் குறிப்பும் பெற்றாம். இப்பாட்டினால் நிலங்காவலின்  
      தன்மையும் அருமையும் கூறியவாறு.   36 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |