122. “என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள்
                            செயவிசைந்தே
 
  அன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல்
                            வேனானாற்
றொன்மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட
                          தெனும்வார்த்தை
மன்னுலகிற் பெறமொழிந்தீர்! மந்திரிகள்! வழக்“
                            கென்றான்.
37
   
     (இ-ள்.) என்மகன்...ஆனால் - என்மகன் செய்த பாதகச்
செய்கைக்குப் பரிகாரமாக அறநூல்வழி நிற்பித்தலாகிய தவம் செய்ய
இசைந்துகொண்டு, அவ்வாறே அன்னியன் ஒரு உயிரைக்கொன்றால்
அதற்குப்பரிகாரமாக அவனைக் கொலைசெய்வதே தீர்வு என்று
கொன்றுவிடுவேனேயானால்; தொல்...என்றான் - உலகத்திலே பழைய
காலத்திலிருந்து வந்த மனுநூல் நீதி, பின்னால் (அதே மரபில் அதே
பேர்கொண்ட) ஒரு தொடை மனுவரசனாலே அழிக்கப்பட்டது என்று
பழிச்சொல் வரும். அவ்வாறு உலகில் வரும் பழியை நான்
அமையும்படி மொழிந்தீர்கள்; இவ்வாறு மொழிதல் மந்திரிகள்
வழக்கம் - என்று அரசன் சொன்னான்.                                                
     (வி-ரை.) பாதகம் - பெரும்பாவம். “நரரினிற் பாலன்
செய்த பாதகம் நன்மை யாய்த்தே“ என்ற திருவாக்கும் காண்க.

     பாதகங்கள் ஐந்து என்பர். ஆயினும் இங்கு இது அவற்றுள்ளே
மிக்கதாகிய கொலை - என்ற பொருளில் வந்தது.

     இரும் தவம் செய - பெரும் கழுவாய்களாகத் தரும
நூல்களில் விதித்தமுறைகளைச் செய்ய - அதாவது பெரும்
பிராயச்சித்தங்களைச் செய்ய.

     தவம் - பாதகம் போக்கும் தீர்வாகத் தபிக்கச் செய்வதே
இங்குத் தவம் எனப்பட்டது. சாந்தராயணம் முதலிய விரதாதிகளும்
பிறவுமாம். இம்முறை கிறித்தவர் முதலிய புறச்சமயிகளிடத்தும்
வழங்குகின்றது.

     இசைந்தேன் - ஒப்புக்கொண்டேனாகி. அன்னியன் -
என்மகன் அல்லாதபிறன்.

     கொன்றால் - கொல்வேனானால். அன்னியன் ஓர் உயிரைக்
கொலை செய்தால் அதற்குத் தீர்வாக அவனைக் கொலை
செய்வேனேயாகில்.

     தொன்மனு நூல்தொடை - என் குலமுதல்வனாகிய
மனுவினால் தொகுக்கப்பட்டுப் பழங்காலம் முதல் வழங்கிவரும் விதி.

     மனுவால்
- அவர் வழியிலே வந்த அந்தப் பெயர் கொண்ட
என்னால். தனது இழிவுகுறிக்க அடைமொழிகொடாது மனு என்றார்.
துடைப்புண்டது - அழிக்கப்பட்டது.

     வார்த்தை - பழிச்சொல். அதாவது “தொன்மனு தொடுத்தார்.
பின்மனு துடைத்தார்“ என்ற பழிச்சொல். தொடை - என்பதனை
மனு என்பதற்கு அடைமொழியாக்கி, மாலையணிந்த மனு - என்று
கூறுவாருமுளர்.


     மன்னுலகில் பெற - தான் மலுத்தொடையைத் துடைப்பினும்
உலகம் பின்னும் நிலைத்து நிற்பதாதலின் மன்னுலகு என்றார்.
அவ்வார்த்தையும் உலகில் நிலைத்துநிற்கும். பெற என்றது
நீதிதுடைப்பினும் வார்த்தைநிலைக்கும் என்றபடி.

     மந்திரிகள் வழக்கு - இவ்வாறு கூறுதல் என்பது
வருவிக்கப்பட்டது; வழக்கு - வழக்கம்.

     இப்பாட்டு முதலிரண்டு அடிகளிலும் - வார்த்தை பெறுதற்குக்
காரணங்கூறியவாறு; உமது மொழிகேட்டு அவ்வாறு செய்வேனானால்
- என்க.

     மகனும் அன்னியனும் செய்யும் பாதகங்கள் ஒரே தன்மை
உடையன ஆயினும் அவற்றிற்குத் தீர்வு மட்டும், செய்தவனைப்
பொறுத்து, வெவ்வேறு தன்மையுடையனவானால் அது மனுநூலுக்கு
மாறுபாடு என்பதாம். இதனால் மனுநூலிலே, குற்றம் செய்தவன்
யாவனேயாயினும் செய்த குற்றத்துக்கேற்ற தண்டனை எல்லார்க்கும்
ஒருபடித்தாகவே விதித்துள்ளது என்பது விளங்கும். எனவே,
இந்நாளிலே கூறப்படும் இந்நூலின் இயல்பும், இதன்மேல் ஏற்றும்
பழியும் நமது மனுவேந்தன் குறிக்கோளாகக் கொண்டு பின்பற்றி
ஒழுகிய தொன்மனுநூலுக்குப் பொருந்தாமை அறிக.      37