126. “போற்றிசைத்துப் புரந்தரன்மா லயன்முதலோர்
                           புகழ்ந்திறைஞ்ச
 
  வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை யுயிர்கொன்றா னாதலினாற்
                           றுணிபொருடா
னாற்றவுமற் றவற்கொல்லு மதுவேயா
                           மெனநினைமின்“
41

      (இ-ள்.) போற்றிசைத்து ... திருவாரூர் - முன்னே
இந்திரன், பிரமன், விட்டுணு முதலிய தேவர்கள் வணங்கும்படி
எழுந்தருளியிருந்த வீதிவிடங்கப்பெருமான், விரும்பி
எழுந்தருளியிருக்கும் தலமாகிய திருவாரூரிலே;
தோற்றமுடை...நினைமின் - பிறந்த உயிரைக் கொன்றவன்
இம்மைந்தன் ஆதலின் அவனைக் கொல்வதே துணியப்படு
பொருள் என்று நினைமின்;

    
  (வி-ரை.) புரந்தரன் மால் அயன் முதலோர்
போற்றிசைத்துப் புகழ்ந்திறைஞ்ச எனக் கூட்டுக. போற்றிசைத்தல்
- துதித்தல். புரந்தரன் - இந்திரன்.

     வீற்றிருந்த பெருமான்
- தேவர்கள் துதிக்கத்
தேவலோகத்தில் இருந்த செய்தியைக் குறிக்கும். முன்னே
அங்கிருந்தமையால் இருந்த என்று இறந்த காலத்தாற் கூறினார். இப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றார் என்று குறிக்கப்,
பின்னர், உறை திருவாரூர் என நிகழ்காலத்தாற் குறிப்பதும் காண்க.

     உறை திருவாரூர் - நிலைத்து எழுந்தருளியிருக்கும்
இடமாகிய திருவாரூர்.

     உறை என்ற வினையெச்சம் மூன்று காலத்துக்கும் பொருந்தும்.
எனவே, இதற்குமுன்னும் இப்போதும்போல, முசுகுந்தச்
சக்கரவர்த்தியின் பூசை யுகந்து இனியும் நிலையாக, நிலைத்து,
இங்கே எழுந்தருளியிருப்பர் என்பதும் பெறுகின்றாம்.

     திருவாரூர் தோற்றமுடை உயீர்
- முத்திபெறும்
நிச்சயமுள்ள பக்குவமடைந்த ஆன்மாக்கள் தான் திருவாரூரிலே
பிறக்கும். ஆரூர்ப் பிறக்க முத்தி, தில்லைகாணமுத்தி, காசியில்
இறக்க முத்தி என்பது வரலாறு. திருவாரூரிற் பிறத்தலாலே
அவ்வான்மா முத்தியடைதல் நிச்சயம். ஆதலின் அவ்வாறு பிறந்த
ஓர் உயிரைக் கொல்லுதல் முத்தனாகும் ஒருவகைக் கொலை
செய்ததாகும். எல்லாக் கொலையும் பெரும்பாவமே என்றாலும்,
ஆரூர்ப் பிறந்த உயிர்க்கொலை, மிகப்பெரும் பாவம் என்பது
கருத்து. “திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்“
என்னும் திருவாக்குக் காண்க. இக்கருத்தையே பின்னர்த்
“தண்டியடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்“
என்பதும் காண்க. ஆரூர்ப் பிறந்த உயிர்கள் முத்த ஆன்மாக்களாய்
நம்மை ஆளாக் கொண்டு உய்யு நெறியிற் செலுத்தும்
ஆற்றலுடைய ஆசாரியத்தன்மை பூண்டிருத்தலால் அவற்றைக் கொல்லுதல்
ஆசாரியக் கொலையுமாம். இவ்வாறாகவும் திருவாரூரிலே யிருந்தும்
உண்ணுதற்பொருட்டுப் பசுக்களையும் ஏனைப் பிராணிகளையும்
கொல்வாரும், கொன்றதைத்தின்பாரும் இக்கருத்துக்களை
நோக்குவார்களாக.

     ஆற்றவும் துணி பொருள் - இதுவே செய்யத்தக்கது.
இதனின் வேறில்லை என்று உடன்பாடு, எதிர்மறை எனும்
இருதலையும் துணியப்படும் பொருள்.

     மற்று அவற்கொல்லுமதுவே - மற்ற அவன் - மற்றவன்.
மற்ற அவனைக் கொல்வதாகிய அதுவே. மற்ற அவனை - என்றது
ஆரூரின் உயிர் கொன்றானை மற்றவன் என்று ஒதுக்கும் தகுதி
நோக்கி, மற்று அவனை என்று உரைத்தலும் ஆம்.

     நினைமின்
- பன்மை ஏவல் வினைமுற்று. மந்திரிகள்
அனைவரையும் நோக்கி; முன்பாட்டிலே இப்பசு அறிவும் பக்குவமும்
முதிர்ந்தது என்று சொல்லி, இப்பாட்டிலே, அஃது எவ்வாறாயினும்
திருவாரூர்ப் பிறக்கும் தவமுடையது என்று முடித்துக்காட்டி,
ஆதலினால், என, அதுகாரணங் கொண்டு துணிபொருளாய்த் தான்
தீர்மானித்ததை, முடிந்தபொருளாக அரசன் உரைக்கின்றானாதலின்,
ஏவல் வினையாற் கூறினார்.

     பழுதுரைத்தீர் - விளம்பீர்
- நினைமின் என மந்திரிகளிடம்
முடிபு கூறிவிட்டு, அதன்படி அரசன் தான் செய்யத் துணிந்த
பொருளை இப்பாட்டாற் குறிக்கின்றார். மேலே சொல்லின்துணிபும்,
இதிற் செயலின் துணிபும் பெற்றாம். 41