127.
|
எனமொழிந்து
“மற்றிதனுக் கினியிதுவே
செயலிவ்வான் |
|
|
மனமழியுந்
துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபேரிடர்யானுந் தாங்குவதே கரும“ மென
அனகனரும் பொருடுணிந்தா; னமைச்சருமஞ்
சினரகன்றார். |
42 |
(இ-ள்.)
என மொழிந்து - என்று மேலே சொல்லியவாறு
சொல்லிப் பின்னர்; மற்றிதனுக்கு...கருமமென - “இனி இதற்குச்
செய்யக் கடவதாகிய செயலாவது இதுவேயாம்; இந்தப் பசு மனம்
அழிகின்ற துன்பத்தை நீக்க மாட்டாதவனாயினேன். ஆதலின், இது
அடைந்த பெருந் துன்பத்தை நானும் தாங்குவதே செய்பொருளாம்“
என்று சொல்லி; அனகன்...அகன்றார் - அரசன் செய்தற்கரிய
செயலைத் துணிந்து கொண்டான். அதுகண்டு அமைச்சரும்
அஞ்சினராகி ஒதுங்கினர்.
(வி-ரை.)
என மொழிந்து - மேலே மூன்று பாட்டாலும்
கூறியபடி.
இதனுக்கு
- நிகழ்ந்துவிட்ட இந்த அநீதிக்குப் பரிகாரமாக.
இதுவே செயல் - முன்பாட்டிலே எதிர்காலத்திற் றுணியத்தக்க
பொருளாய் அமைச்சரிடம் சேய்மைச் சுட்டிலே குறித்த அதுவே
என்னும்பொருள், இங்கு நிகழ்காலத்துத் துணிகின்ற பொருளாய்
அரசன் மனத்து நிகழ்ந்துவிட்டமையால் அண்மைச் சுட்டிலே
இதுவே என்றாயிற்று.
செயல்
- செய்தக்க பொருள். இதனை அல்விகுதி பெற்ற
வியங்கோள் வினைமுற்றாகக் கொண்டு தன்னையே நோக்கி இதுவே
செய்க எனப் பொருளுரைத்தலும் ஒன்று.
தாங்குவதே கருமம்
- இதனால் அதன் இயல்பும் காரணமும்
கூறியவாறு. தாங்குவதே கருமம் - அதலின், இதனுக்கு
இதுவே
செயல் எனத் துணிதல்.
மனமகியுந்துயர்
- மனம் அழிதற்குக் காரணமாகிய துயர்.
இது தனது - இதனுடைய.
உறுபேரிடர் -
பொருந்தாதாயினும் வந்து உற்றதாகிய பெரிய இடர். உறுஇடர்
என்றும், பேர் இடர் என்றுந் தனித்தனி கூட்டுக.
தாங்குவதே - இடர் பெரிதாயினும் தாங்குவதே
என்றபடி.
யானும் - பசு தாங்குவதோடு நானும்; இறந்தது
தழுவிய எச்ச
உம்மை. துயர் அகற்ற மாட்டாத நான், அத்துயரை யானுந் தாங்கிப்
பங்கிட்டுக்கொண்டு அதன் துன்பத்தைக் குறைப்பேன் என்று
துணிந்தார். தானுந் தாங்குதலினால் துன்பம் குறைவது எவ்வாறு
எனின்? தாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி பிறர் தம்மோடு அனுபவித்துக்
கூறு கொள்ளும்போது இன்பம் மிகுதலும், துயரானது அவ்வாறன்றிப்
பிறர் தம்மோடு அனுபவித்துக் கூறுகொள்ளும்போது துன்பங்குறைதலும் இயல்பாம். இஃது அவ்வின்ப
துன்பங்களுக்குள்ள
இயல்பு. ஆதலின் இப்பசுவின் உறுபேரிடரை அகற்ற இயலாதவழி
அத்துயரை நானும் தாங்கி நின்று அதனோடு அனுபவித்துக்
கூறுகொண்டு குறைப்பேன் - என்பது அரசன் கருமமெனக் கொண்ட
குறிப்பு.
அனகன்
- பாவமில்லாதவன். ந + அகன் = அநகன்;
“அனகனே குமர விநாயக சனக“ திருவிசைப்பா.
அவற்
கொல்லும் அதுவே செயல் என்று அரசனும் கொலை
துணிந்தானாதலின் இச்செயலும் மகன்செயல் போன்று பாவச்செயல்
தானே என்று ஐயமுறுவார்க்கு இஃது அவ்வாறு ஆகாது என்க;
மகனைப் பாவச் செய்கையின் பொருட்டுத் தண்டித்து அவனது உயிர்
நரகத்துட் புகாது அரச தண்டனையின் வழி அதற்கு நற்கதி
அளித்தலாலும், பசுவின்துயரத்தைப்பகிர்ந்து கொள்வதன் மூலம் ஊர்
உயிரினது துன்பத்தைக்குறைத்தலாலும், இஃதுபுண்ணிமேயாதலின்.
இதுபற்றியே இங்கு அரசனை அனகன் என்ற பெயராற்
கூறினார். குற்றஞ் செய்தார் அரசனாற் றண்டிக்கப்படின் அவர்கள்
செய்த பாவத்திற்குரிய நரக தண்டனையிலிருந்து விடுபடுகிறார்
என்பது சாத்திரம். 42
|
|
|
|