128.
|
மன்னவன்றன்
மைந்தனையங் கழைத்தொருமந்
திரிதன்னை |
|
|
“முன்னிவனை
யவ்வீதி முரண்டேர்க்கா
லூர்க“
வென
அன்னவனு மதுசெய்யா தகன்றுதன்னா
ருயிர்துறப்பத்,
தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு
மறுகணைந்தான். |
43 |
(இ-ள்.)
மன்னவன் ... என - (இவ்வாறு செய்கைதுணிந்த
அரசன்) தன்மகனை அழைத்துவரச் செய்து, ஒரு மந்திரியை நோக்கி
“இவனை அந்த வீதியிலே வலிய தேர்க்காலின்கீழ்க் கிடத்தி தேரை
இவன்மீதில் ஊர்ந்து விடுக“ என்று கட்டளையிட; அன்னவனும் ...
துறப்ப - அவ்வமைச்சனும் அது செய்யாதுபோய்த் தன் அரிய உயிர்
துறந்தானாக; தன்னுடைய ... அணைந்தான் - (அதனையறிந்த
அரசன்) தனது குலமகனை (முறை செய்தற்காகத்) தானே கொண்டு
அவ்வீதியில் சென்று சேர்ந்தான்.
(வி-ரை.)
ஒரு மந்திரி - ‘முதிர்ந்த கேள்வித் தொன்னெறி
அமைச்சன்' என்று 30-வது பாட்டிற் குறித்த அமைச்சனாவான்.
அவனது ஒப்பற்ற தன்மை தெரிவிக்க “ஒரு மந்திரி“ என்றார்.
அவனது ஒப்பற்றதன்மை முன்னே 116வது பாட்டிலே அவனது
சொல்லாலும், இங்கே அவனது செயலாலும் துணியப்படும்.
முன் இவனை - முன்
- வேறொன்றும் செய்வதற்கு முன்.
இந்நிகழ்ச்சி முன்னாய் - காரணனாய் - நின்ற இவனை என்று
உரைப்பதும் ஒன்று; முன்னே நிற்கின்ற இவனை என்பதுமாம். இவன்
- மகனை அழைத்துவந்து தன் முன்னர் வைத்துள்ளானாதலின் இவன்
என்று அண்மைச் சுட்டிற் காட்டினான்.
இந்நாள் நீதி முறையிலும் குற்றம் செய்தாரை முன்னர்க்
கொணர்ந்து வைத்துக்கொண்டு முறைத் தீர்ப்புச் செய்யும் வழக்கும்,
அதன் உள்ளுறையும் காண்க.
அவ்வீதி
- பசுக்கன்று தேர்க்காலில் ஊரப்பெற்று
இறத்தற்கிடமாகிய அந்த வீதி. அரசன் தீர்ப்புச் சொல்லிய இடம்
அரண்மனை வாயில் ஆதலாலும், கன்று தேர்க்காலில்
செலுத்தப்பட்டது அரசர் உலாவும் தெருவாதலாலும், இடவேறுபாடு
நோக்கி அவ்வீதி எனச் சேய்மைச் சுட்டினாற் கூறினார். கொலை
முதலிய பெருங் குற்றம் செய்தாரைப் பிறர்க்கு எடுத்துக்காட்டாக
(உதாரணமாக) இருக்கும்பொருட்டு அக்குற்றம் நிகழ்ந்த அந்த
இடத்தில் முறை செய்தல் அந்நாள் நீதிவழக்கு. இதனையே சில
ஆண்டுகளுக்கு முன்வரை ஆங்கில ஆட்சியினரும் பின்பற்றிக்
கொலை, தூக்கு, கசையடித்தல் முதலிய தண்டங்களை
வெளிப்படையாகப் பறைசாற்றித் தெருச் சதுக்கங்களில் வைத்துக்
குற்றவாளிகளை முறைசெய்து வந்தனர்.
முரண் தேர்க்கால் ஊர்க
- முன்செய்த பாவத்திற்கு
முரணாகத் தேர்க்காலின் கீழ்க் கிடத்தி ஊர்ந்துவிடு என்பதும்
குறிப்பு. கொலை, முறைசெய்யும் வழி பல இருப்பினும் “செய்தார்க்குச்
செய்தபடி தண்டம் விதித்தல்“ எனும் தண்டநூல் விதிப்படி கன்று
தேர்க்காலில் ஊரப்பட்டபடியே இவனையும் தேர்க்கா லூர்க என்று
முறை செய்தானாகும். இறைவன் முறை செய்வதும் இவ்வாறே
என்பது சாத்திரம்.
அது
செய்யாது தன் உயீர் துறப்ப - இக்குற்றத்திற்குத்
தீர்வு அறநூற்படி மகனை நிறுத்துவித்தலே யாம் என்று தாம்
அறிந்தவாறு சொல்லிய அமைச்சர்களிலே தலைவனான
இவ்வமைச்சனுக்குத் தன் மனதின் உண்மைக்கு மாறுபாடான
இச்செயல் செய்ய மனம் ஒருப்படவில்லை. அன்றியும் உலகம்
போற்றுங் குணத்தானாய்த் தவத்தாற் பிறந்த அரச குமாரனாயும் தன்
எசமானனாயும் உள்ள அவனைத் தேர்க்காலில் ஊர்தலாகிய அரிய
செய்கையில் அவன் மனம் துணியவில்லை. அரசன் ஆணைப்படி
செய்யாமல் இருந்து அதன் பொருட்டு அரசன் தன்னை முறைசெய்ய
நின்று மானம் அழிதற்கும் ஒருப்படவில்லை. ஆதலின் மனம்
துணியாத செய்கையைச் செய்வதைக் காட்டிலும் (“மானம் அழிந்த
பின் வாழாமை முன்னினிது“ என்றபடி) உயிர் துறத்தலே மேலென்று
தன்னரிய உயிரைந் தானே துறந்து கொண்டனன்.
“தன்னுயிர்
நீப்பினும் செய்யற்க, தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை“ - (குறள்) |
என்ற நீதியுங் காண்க.
தற்கொலை செய்துகொள்ளல் பெரும் பாவமேயாயினும்
தன்
உயிரினும் சிறந்ததாய்த் தான்கொண்ட கொள்கையும் மானமும்
அழிவுபட வாராமற் காத்தற்கும், (அரசன் ஆணையின்படி
இருந்தபோதிலும்) இது கொலையே யாதலின் அதன்பழி வாராமற்
காத்தற்கும் உயிர் துறந்தனன். ஆதலின் இது பாவமாதல் இல்லை
என்க. இது பின்னர் இவன் உயிர்மீட்சிக்குக் காரணமாதலும் காண்க
இச்செயல் பற்றியே இம்மந்திரியை,
“வேந்துமகத்
தேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - “ |
என்று மாதவச் சிவஞானமுனிவரர்
விதந்து எடுத்துக்காட்டியிருத்தலும்
காண்க.
குலமகன்
- குலத்தைத் தன் வழிவழி நீடிக்கச் செய்யவல்ல
மகன்.
மகனை அழைத்த அரசன் அவனை விசாரியாமலே தண்டம்
விதித்தல் தகுதியாமோ எனின், இந்நிகழ்ச்சி யாவும் அறிந்துளான்
முதிர்ந்த கேள்வித் தொன்னெறி அமைச்சன் கூறியவாற்றாலும், பசு
இடரால் வெவ்வுயிர்த்து - கதறி - மணியை யெறிந்து - விழுந்ததனை
நேரே கண்டதனாலும் உண்மை தெரிந்து கொண்டான்; ஆதலின்
வேறு விசாரணை வேண்டப்பெறவில்லை என்க.
கொண்டு
- தண்டம் செய்தற்காக. மறுகு - வீதி. 43
|
|
|
|